1. திருவிற்கோலம் (கூவம்)

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 சிவ ஸ்தலங்களில் ஒன்று.

இறைவரின் திருப்பெயர் திரிபுராந்தகர்.
இறைவியின் திருப்பெயர் திரிபுராந்தநாயகி.

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய இம்மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்பால் ஆன மூன்று கோட்டைகளை அமைத்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். எனவே அவர்கள் இறைவனிடம் முறையிட,  இறைவன் அசுரர்களின் ஆற்றலை ஒடுக்கியதோடு, அந்த மூன்று நகரங்களையும் அழித்த காரணத்தால் திரிபுராந்தகர் எனப் பெயர்பெற்றார். திரிபுரம் எரித்த காலத்தில் இறைவன் வில்லையேந்திய திருக்கோலத்தோடு வீற்றிருந்தமையின் விற்கோலம் எனப்பெயர்பெற்றது என்பர்.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை அர்ச்சகர்கள் கூட தொட்டுப் பூசை செய்வதில்லை. எனவே இறைவனை 'தீண்டாத் திருமேனி' என அழைப்பர்.

அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும்,  மழை குறைவு என்றால் சிவப்புநிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம். ஞானசம்பந்தப் பெருந்தகையார் இத்தலப்பதிகத்தில் ``ஐயன் நல்ல அதிசயன்`` எனக்குறிப்பிட்டிருப்பது இது கருதியாகும். இத்தலத்திற்கு ஞான சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

 உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
 திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
 வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
 செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே .
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்