24. கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆன்டாங் கோயில்)

இறைவன் : சொர்ணபுரீஸ்வரர்.
இறைவி : சொர்ணாம்பிகை, சிவாம்பிகை.

குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம். குடமுருட்டி ஆறு தேவார காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது.

சோழ வள நாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 97 ஆவது ஸ்தலம் ஆகும். 

இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள நாவுக்கரசரின் பதிகம் ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை "கடுவாய்க்கரைத்  தென்புத்தூர்" என்று குறிப்பிடுகிறார்.

முனிகுமாரரான மயந்தன் என்பவர் தாம் செய்த சிறு தவறுக்காக தந்தை அளித்த சாபத்தின் காரணமாக ’கண்டதேவர்’ என்ற பெயரில் பூவுலகில் மறுபிறவி எடுத்தார்.

முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகேஸ்வரருக்கு கோயில் கட்டும்பொழுது, அவரின் அமைச்சராக இருந்த  கண்டதேவருக்கும் சிவபெருமானுக்கு திருக்கோயில் எடுக்கும் ஆவல் எழுந்தது. அந்நாளில் திருவாரூர் கோயிலுக்கு கற்கள் கடுவாய்க்கரைப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்பட்டது.

கோவில் கட்டுவதற்கு பெரும் பொருள் தேவைப்படும் என்பதையும் உணர்ந்த அவர், பெரும்பொருள் செலவிட மன்னரும் சம்மதிக்க மாட்டார்.  எனினும், அவரும் சிவபக்தராதலால் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர் மறுக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி திருவாரூர் கோயிலுக்கு கற்கள் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்தும் ஒரு கல் மற்றும் ஒரு கூடை சுண்ணம் (சுண்ணாம்பு) வீதம் எடுத்து அழகிய திருக்கோயிலை சிவபெருமானுக்கு எழுப்பினார் கண்ட தேவர்.

கோயிலைக் கட்டிமுடித்தபின் கண்டதேவர், மன்னனிடம் தாமும் இறைவனுக்கு ஒரு கோயில் எழுப்பியுள்ளதாகவும் அதன் குடமுழுக்கிற்கு வரவும் அழைப்பு விடுத்தார்.  மன்னரும் அவ்வாரே ஆகட்டும் என்று குடமுழுக்கன்று கோவிலுக்கு வருகை புரிந்தார். கோவிலின் அழகை ரசித்த மன்னனும், எவ்வாறு தம்மால் கோவில் கட்ட இயன்றது என வினவ, கண்ட தேவரும் உண்மையைக் கூறினார். நேர்மையான அமைச்சர் இவ்வாறு தாம் அறியாமல் பதவியை பயன்படுத்தி கோயில் எழுப்பியது கண்டு வெகுண்டார் மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி.  

சட்டத்தை மட்டுமே நினைந்த மன்னர் அமைச்சரை சிரச்சேதம் செய்யும்படியும் ஆணையிட்டார். கண்ட தேவர் கலங்காமல், தனது கடைசி விருப்பமாக தான் எழுப்பிய இறைவனின் ஆலயம் முன்னே தான் உயிர் விட நினைப்பதாக கூறினார்.  ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்து படுக்க வைக்கப் பட்டார். அமைச்சரைக் கொல்ல வாளை ஓங்கினார்கள்..... ஓங்கிய வாள் அமைச்சர் கழுத்தில் விழுந்தது. அமைச்சரின் சிரசு துண்டாகி "ஆண்டவனே!, ஆண்டவனே!"  எனக் கூறிக்கொன்டே இறைவனின் சந்நிதியில் விழுந்தது.  கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.


அப்போது வானிலே பல கோடி சூரியப்பிரகாசத்துடன் இடபவாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான். நடந்த தகவலை அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழைபொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட்டான். அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் என்பதை முசுகுந்த சக்கரவர்த்திக்கு உபதேசிக்கப்பெற்றார்.

 ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
 அருத்த னையடி யேன்மனத் துள்ளமர்
 கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய
 திருத்த னைப்புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்