தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 253 ஆவது தலமாகும். பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 9 ஆவது ஸ்தலம். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
திருவாடானை
இறைவன் : ஆதிரத்தினேசுவரர், ஆடானைநாதர்.
இறைவி : அம்பாயிரவல்லி.
வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலம் ஆடானை என்று பெயர் பெற்றது. இத்தலத்து இறைவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார்.
பிரம்மதேவர் கூறியபடி ஒருமுறை சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி ரத்தினமயமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.
மாதோர் கூறுகந் தேற தேறிய ஆதியா னுறை ஆடானை போதினாற் புனைந் தேத்து வார்தமை வாதியா வினை மாயுமே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்