2. திருவெண்பாக்கம் (பூண்டி)

தேவார காலத்தில் இருந்த பழைய கோயில் குசஸ்தலையாற்றின் கரையில் திருவிளம்பூதூரில் இருந்தது. திருவிளம்பூதூருக்குப் பத்ரிகாரண்யம் என்றும் பெயர். (இலந்தை மரக்காட்டுப் பகுதி). சுந்தரருக்கு ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலம் இதுதான். 



இறைவன்:  ஸ்ரீ  ஆதரதண்டேஸ்வரர், ஸ்ரீ  ஊன்றீஸ்வரர்.

இறைவி:  ஸ்ரீ மின்னொளியம்மை , ஸ்ரீ தத்கௌரி  அம்பாள்.

சுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் இருந்து பிரிய மாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார்.   ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பரவை நாச்சியாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் கண் பார்வை இழந்தார். பிறகு திருமுல்லைவாயில் இறைவனை தரிசித்து பின் திருவெண்பாக்கம் வந்த போது இங்குள்ள இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் "உளோம் போகீர் " என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது.




11ஆம் நூற்றாணைடைச் சேர்ந்த இக்கோயில் பல கல்வெட்டுக்களையும் கொண்டிருந்தது. சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்க குசஸ்தலையாற்றில் அணையைக் கட்ட 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் தேவார காலத்தில் இருந்த ஊண்றீஸ்வரர் ஆலயம் உள்ள திருவிளம்பூதூரும் அடங்கிற்று. ஆகவே திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இட்த்தில் - பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 5-7-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.

 பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற்
 பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்
 குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன
 உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
- சுந்தரர்

கருத்துகள்