3. திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 சிவ ஸ்தலங்களில் 31 வது ஸ்தலம்.

இறைவன்: அரசிலிநாதர், ஆலாலசுந்தரர், அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர்.

இறைவி: பெரியநாயகி, அழகியநாயகி.

வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக இங்கு வந்தபோது, சிவன் அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.  அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலி என்றும், இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது


வாமதேவ முனிவருக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் பூமியில் புதையுண்டு போனது. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னன் ஒரு நந்தவனம் அமைத்து மற்றொறு சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தான். பணியாள் ஒருவன் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியை செய்து வந்தான்.  ஒரு சமயம் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்கு திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான். மன்னனும் அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான்.  மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன் கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட, காவலர்கள் விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது.  மன்னன் அரசமரத்தின் பொந்திற்குள் அம்பு எய்தான்.  மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. லிங்க பாணத்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.





இறைவர் திருப்பெயர் : அரசிலிநாதர்,  அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி, அழகியநாயகி.

அரச மரத்தை இறைவன் வீடாக (இல்லாக) கொண்டமையால் இப்பெயர் பெற்றது. இந்த கோயில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. வாமதேவ முனிவர், சாளுக்கிய மன்னனும்  பிரதோஷ நாளில் வழிபட்டுப் பேறு பெற்றனர். மூலவர் - சிவலிங்கத் திருமேனி; குட்டையான பாணம்; ஆவுடையாரும் தாழவுள்ளது.

 பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை 
 கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி 
 வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியம் தோள்மேல் 
 ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்