5. திருஆப்பனூர்

தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 246வது ஸ்தலம். பாண்டிய நாட்டில் உள்ள ஸ்தலங்களில் 2வது ஸ்தலம்.

இறைவன் : ஸ்ரீ  இடபுரேசர் (ரிஷபுரரேசர்), ஸ்ரீ அன்னவிநோதன், ஆப்புடையார்.
இறைவி  : ஸ்ரீ  குரவங்கழ் குழலி.

ஒரு முறை மதுரையை ஆண்ட சோழாந்தகன் எனும் பாண்டிய மன்னன் வேட்டையாடுவதற்கு காட்டிற்குச் சென்றான். அங்கே ஒரு மான் ஓடுவதைக் கண்ட மன்னன் அதை நீண்ட தூரம் துரத்திச் சென்றான்.  பின் களைப்புற்ற மன்னன் ஒரு மரத்தடியில் படுத்து கண் மூடினான். மன்னனை தேடி வந்த காவலர்கள் மன்னனின் களைப்பை போக்க உணவு உண்ணும் படி வேண்ட மன்னன் , " சுயம்பு லிங்க தரிசனமின்றி நான் அமுது உண்ண மாட்டேன்" என்றான். 





காவலர்களும் மன்னனை உண்ண வைப்பதற்காக சற்று தூரத்தில் இருந்த ஒரு ஆப்பை நட்டு வைத்து அதை மன்னரிடம் காட்டி இது சுயம்பு லிங்கம் என்று கூறினர்.  மன்னரும் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து உணவு உண்ணலானார். உணவு உண்ட பின் அருகே சென்று பார்த்து அது ஒரு ஆப்பில் செய்த செயற்கை லிங்கம் என்று அறிந்து தனது சிவவிரதம் பாழ்பட்டதென வருந்தி உயிர் விட துணிந்தார். உடனே, " மன்னனே வருந்தாதே! நானே ஆப்பு வடிவில் எழுந்துள்ளேன். இங்கே ஒரு கோவில் நிறுவி சுகந்த குந்தலாம்பிகை அம்மன் சன்னதியையும் நிறுவி எமை பூசிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்டதும் மகிழ்ந்தான். அவ்வண்ணமே மன்னனும் இறைவனுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபட்டான். ஆப்பினடத்தில் இறைவன்   வெளிப்பட்டதால் இறைவன் "திரு ஆப்புடையார்" என வழங்கப் பெறுகிறார். 

சோழாந்தகன் மகன் சுகுணன் ஆட்சிக் காலத்தில் ஒரு சமயம் கோள்களின் நிலை திரிய வறட்சி மிகுந்திருந்தது. 

ஆப்புடைஈசனுக்கு தினமும் பூசை செய்து வரும் அந்தணர் அருகில் உள்ள ஏரியின் ஒரு பள்ளத்தில் இருக்கும் நீரைக் கொண்டு நெல் விதைத்து அதிலிருந்து வரும் அரிசியைக் கொண்டு இறைவனுக்கு அமுது செய்து வந்தார். அது கண்டு பிற அந்தணர்கள் அந்த எரிப்
பள்ளத்து நீரை தங்கள் பருத்தி நிலத்துக்குப் பாய்ச்சி இவருக்கு நீர் வரவிடாமல் செய்தனர். இவரும் இறைவனிடம் வருத்தத்துடன் முறையிட இறைவன், " நீதி இல்லாத இந்த தலத்தில் நான் இருக்க விரும்பவில்லை. இத்தலம் நீங்கி நான் வேறு ஒரு தளம் செல்கிறேன். நீ நாம் செல்லும் வழியில் கொன்றை மலரும், இடபத்தின் கால் தடத்தையும் கண்டு என்னை பின் தொடர்ந்து வா " என்றார்.   

உமையோடு இடபத்துடன் வைகை வடகரையில் தங்கினார். அன்றிலிருந்து அவ்விடத்திற்கு "இடபபுரம்" என்றும் அருகிலுள்ள தீர்த்தத்திற்கு "இடப தீர்த்தம்" என்னும் பெயர் வழங்கலாயிற்று. அந்தணரும் இறைவனை பின் தொடர்ந்து சென்று அவ்விடத்தில் இறைவனை வழிபடலானார். நைவேத்யத்திற்கு என்ன செய்வது என்று குழம்பிய வேளையில் இறைவன் இந்த வைகை ஆற்றில் மணலெடுத்து உள்ளன்போடு உலையில் இட்டு சமைத்தால் உணவகம் என்றும் இதை பிறர்க்கு உரைத்தால் மணல் சோறாகாது என்றும் கூறினார். அவ்வாறே அந்தணரும் ஆற்று மணலை உலையில் இட்டு உணவு சமைத்து இறைவனுக்கு அமுது படைத்தது தானும் தன் மனைவியோடு உண்டு வரலானார். அது முதல் இறைவன் "அன்ன விநோதன்" என்று அழைக்கப்படலானார். ஒரு நாள் அந்தணரின் மனைவி இது குறித்து அந்தணரிடம் வினவ, அந்தணரும் தன் மனைவியிடம் இந்த வினோத உணமையைக் கூறிவிட்டான். அதுமுதல் மணல் சோறாகவில்லை. அந்தணர் மனம் வருந்தி இறைவனிடம் வேண்ட, "கவலைப்படாதே! மதுரை மன்னனிடம் செல். முன்னாள் கனவில் உம்நிலை உணர்த்தியுள்ளோம்!" என்று இறைவன் அருளினார். அந்தணரும் மன்னன் சுகுணனிடம் சென்று நடந்ததைக் கூற, மன்னனும் உள்ளம் உருகி இறைவனுக்கு கோயிலும் அந்தணருக்கு மாளிகையும், கோயிலைச் சுற்றி நகரமும் அமைத்துக் கொடுத்தான். 

இத்திருத்தலத்தில் ஒரே கல்லினால் ஆன நடராஜர் சிலை மிகவும் அழகாக உள்ளது.      

 முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
 ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
 செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
 பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்