தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 255 வது ஸ்தலம். பாண்டிய நாட்டில் உள்ள ஸ்தலங்களில் 11 வது ஸ்தலம்.
இறைவன்: ஸ்ரீ புஷ்பவனீஸ்வரர், ஸ்ரீ பூவனநாதர் .
இறைவி: ஸ்ரீ சௌந்தர்யநாயகி, ஸ்ரீ மின்னனையாள்.
பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து இரசவாதம் செய்து பொன் கொடுக்க, அவள் இதனால் சிவலிங்கம் அமைத்து வழிபட, அது மிகவும் அழகாயிருப்பதைக் கண்டு ஆசையுடன் அச்சிவலிங்கத் திருமேனியை கிள்ளி முத்தமிட்டாளாம். கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் இன்றும் காணலாம்.
அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல் குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம் முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந் திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே.
- திருஞானசம்பந்தர்
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
- திருநாவுக்கரசர்
திருவுடை யார்திரு மால்அய னாலும் உருவுடை யார்உமை யாளைஓர் பாகம் பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.
- சுந்தரர்
கருத்துகள்