7. வட திருமுல்லைவாயில்

இறைவன் : நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.

இறைவி: லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை.

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 22 ஆவது ஸ்தலமாக விளங்கும் இத்தலம் சுந்தரர், அருணகிரி நாதர், வள்ளலார் போன்ற அடியவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். 


காந்தன், ஓணன் என்ற இரு குறும்பர்கள் திருமுல்லைவாயில் காட்டில் அரண் அமைத்து நாட்டு மக்களை துன்புறுத்தி வந்தனர். தொண்டைமான் என்னும் மன்னர் அக்குறும்பர்களை ஒடுக்கும் பொருட்டு திருமுல்லைவாயிலுக்கு படை எடுத்து சென்றார். குறும்பர்களுக்கு பைரவர் துணையாக நின்றதனால்  தொண்டைமான் அப்போரில் தோல்வியுற்று திரும்பும் பொழுது அரசனுடைய யானையின் கால்களை முல்லைக்கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை மீது இருந்தவாறே தன்னுடைய வாளால் அரசன் கொடிகளை வெட்டிய பொழுது ரத்தம் பீறிட்டது. அதுகண்ட மன்னன்  யானையின் மேலிருந்து இறங்கி முல்லைக்கொடிகளை நீக்கவும் அங்கு வாளால் வெட்டுப்பட்ட சிவலிங்கம் ஒன்றைக் கண்டு பதறினான். தான் செய்த தவறுக்காக தன் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணிய பொழுது இறைவன் அங்கு வெளிப்பட்டு தான் வெட்டுப்பட்டாலும்   மாசிலாமணியாக விளங்குவான் என்று கூறி அருள்புரிந்தான். மேலும் நந்தியெம்பெருமானை அரசனுக்கு துணையாக அனுப்பி குறும்பர்களை வெல்லுமாறு செய்தான். 



வெற்றிபெற்ற அரசன் குறும்பர்கள் கோட்டையை அழித்து அங்கிருந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களைக் கொண்டு இறைவனுக்கு திருமுல்லைவாயிலில் ஒரு ஆலயம் கட்டுவித்தான். இத்தூண்களை இன்றும் கருவறை வாயிலில் நாம் காணலாம். வெட்டுப்பட்ட காரணத்தால் இறைவன் திருமேனி சந்தனக்காப்பு இடப்பட்டிருக்கும்.  வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று சந்தனக்காப்பு  மாற்றப்படும்.



இத்தலத்து நந்தியெம்பெருமான் இறைவனுடைய ஆணையை ஏற்று அரசனுக்கு துணையாகச் சென்றதனால் இறைவனை நோக்காது கிழக்கு திசை நோக்கி திரும்பியபடி இருப்பார். தொண்டைமான் மன்னனுக்கு ஸ்வாமி அவசரக் காட்சி அளித்ததனால் ஸ்வாமியும், அம்பாளும் இடம் மாறி இருப்பர்.

 திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் 
 சீருடைக் கழலள்என் றெண்ணி 
 ஒருவரை மதியா துறாமைகள் செய்தும் 
 ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் 
 முருகமர் சோலை சூழ்திரு முல்லை 
 வாயிலாய் வாயினால் உன்னைப் 
 பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் 
 பாசுப தாபரஞ் சுடரே.
- சுந்தரர்

கருத்துகள்