இறைவன் : சொக்கலிங்கப்பெருமான், சோம சுந்தரேஸ்வரர்
இறைவி : அங்கயற்கண்ணி, மீனாட்சிதேவி
ஐந்து சபைகளுள் இது வெள்ளிச் சபை.
- இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற சாபம் தீர்க்க விமானத்தில் எழுந்தருளிய தலம்.
- சிவ பெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்த தலம்.
- சம்பந்தர் அனல், புனல் வாதம் செய்து சைவத்தை நிலைப் பெறச் செய்த இடம்.
- மூர்த்தி நாயனார் அவதரித்த தலம்.
- கூன் பாண்டியனின் வெப்பு நோய் ஞானசம்பந்தரால் நீக்கப்பெற்று, நின்றசீர் நெடுமாற நாயனார் ஆகிய தலம்
- மாணிக்க வாசகர் இறைவனது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு உணர்த்திய தலம்.
- இராஜசேகர பாண்டியனுக்கு இறைவன் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய தலம் (1).
பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆடுகிறார். நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி வேண்டிக் கொள்ள நடராசரும் அவனுக்காக இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காணவந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதர் முனிவரும் சிதம்பரம் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தனது ஆடிய கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் எனக் கூறப்படுகிறது
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
- திருஞானசம்பந்தர்
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்