9. திருவேடகம்

பாண்டிய நாட்டில் உள்ள ஸ்தலங்களில் 4 ஆவது ஸ்தலமும், தேவாரபாடல் பெற்ற ஸ்தலங்களில் 248 ஆவது ஸ்தலமாகும் இது வைகை நதி கரையோரம் அமைந்து உள்ளது. 

இறைவன் திருப்பெயர் : ஏடகநாதேஸ்வரர்
இறைவி திருப்பெயர்      : ஏலவார்குழலி

நின்றசீர் நெடுமாற நாயனார் (எ) கூன்பாண்டியன் பாண்டிய மன்னரும் சைவ நாயன்மார்களுள் ஒருவரும் ஆவார். “நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை குறிப்பிடுகிறது. இவர் சோழமன்னரின் பாவையாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர் பல்கிப் பெருகி, சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். 

இவர்களுடைய வலையில் சிக்கியிருந்த மன்னனை விடுவிக்கத் திருவுளங் கொண்ட மங்கையர்க்கரசியார், தாம் பிறந்த சோழநாட்டில் போல, புகுந்த நாட்டிலும் சைவமெய்ச்சமயம் பரவுதலை விரும்பி, அப்போது திருமறைக்காட்டிலே ஆளுடைய அரசுகளோடு இருந்த ஆளுடைய பிள்ளையாரை (திருஞானசம்பந்தர்) மதுரைக்கு எழுந்தருளச் செய்தார். 

திருஞானசம்பந்தர் வந்தபொழுது தன்னையும் அறியாமல் தன் தலைப்பக்கமாக இருந்த பொற்றவிசில் அவரை அமருமாறு பாண்டியன் கையெடுத்துக் காட்டினார்.அப்பொழுது ஆரவாரித்த சமணரை அடங்குமாறு சொல்லி தம் சுரநோயைத் தீர்ப்பதுவே இருசாராருக்கும் உகந்தது  என உரைத்தார்.

திருஞானசம்பந்தர் நாளும் கோளும் நலமில்லாதிருந்தும் உமையொருபாகன் உள்ளத்து விருப்பத்தால் “அவை நல்ல நல்ல” என “கோளருபதிகம்” பாடி, ஏகினார். திருவைந்தெழுத்து ஓதி, திருப்பதிகம் பாடி திருநீறு தடவியபோது அவர்தம் வலப்பக்கம் அமுத இனிமையும் சுவர்க்க இன்பமும் போல சுகம் செய்தது. மற்றைய பாகம் நரகத் துன்பமும் கொடுவிடமும் போல வருத்தியது. சமணரை “வாதில் தோற்றீர்” எனக் கூறிச் சம்பந்தப் பிள்ளையாரை மனதார வணங்கி வருத்தம் முற்றும் தீரும்படி வேண்டினார். முற்றும் தீர்ந்ததும் தலைமீது கைகுவித்தபடி  “ஞானசம்பந்தர் பாதம் அடைந்து உய்ந்தேன்” எனப் போற்றினார்.  


மன்னர்  சமணரை நோக்கி  “என்னவாது உமக்கு” என ஏளனஞ்செய்தார். ஏளனக்குறிப்பறியாத சமணர் அதனை ஒரு வினாவெனக் கொண்டு வாதத்திற்கும் எழுந்தனர்.  அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். அது கண்டு நகைசெய்த நெடுமாறர் ஏடு எரிந்த பின்னரும் “நீங்கள் தோற்றிலீர் போலும்” என்றார்

பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர் " என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. அத்திருப்பாசுரத்தில் அமைந்த "வேந்தனும் ஓங்குக " எனும் மந்திரமொழியால் கூன்நீங்கி நின்றசீர் நெடுமாறன் ஆனார். 

மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம். 

வாதில்தோற்ற சமணரை “வெங்கழுவேற்றுவன், இவ்வேந்தன்” என அவர்கள் சொன்னதற்கேற்ப முறை செய்யுமாறு குலச்சிறையாரைப் பணித்தார். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். 

பாண்டியனும் சைவம் ஓங்கச் செய்தார். இங்ஙனம் பாண்டியன் செங்கோல் ஓச்சும்போது அந்நாளில் வடநாட்டு மன்னர் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர்.அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால் நெல்வேலிவென்ற நெடுமாறன் எனப் பெயர் பெற்றார்.

 வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
 வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
 ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
 சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்