10 திருக்கச்சியேகம்பம் (காஞ்சி)


இறைவன் : ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர்
இறைவி: ஏலவார்குழலி, காமாட்சியம்மை
தல மரம் : மா மரம்

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது முதலாவது ஸ்தலமாகும். 

திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம். 

மா மரத்தைத் தலமரமாக (ஏ+ஆம்ரம்= மாமரம்) கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெற்றது. 

பஞ்ச பூதத் தலங்களில் இது பிருத்துவித் (நிலம்) தலம்.

சுந்தரருக்கு இடக்கண் ஒளி பெற்ற தலம்.

ஒருமுறை  திருக்கயிலையில் ஈசனும் உமையும்  மகிழ்ச்சியுடனிருக்கும்போது, அம்மை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, சூரிய, சந்திரர், ஒளிநீங்கி, உலகம் முழுவதும் இருளானது. படைப்பு, இறைவழிபாடு முதலிய அறங்கள் செய்யப்படாது நீங்கின. இது கண்டு திடுக்கிட்ட அம்மையார் கண்களிலிருந்து கைகளை எடுத்துக்கொள்ள, சிவபெருமான் கண்களைத் திறக்க, உலகம் முன்போல் ஒளிபெற்று விளங்கியது. 

தன் செயலுக்கு வருந்திய அம்பிகையிடம் ஐயன், ''என் கண்களை மூடித் திறந்த சிறுபொழுதில் உலகத்துக்கு பல ஊழிக்காலம் கழிந்து, உயிர்கள் வருந்தின. தர்மங்கள் தடைப்பட்டன. அதனால் உனக்கு ஏற்பட்ட பாவம் நீங்க, மண்ணுலகில் தோன்றி, நகரங்களில் சிறந்த காஞ்சியில் எம்மைக் குறித்து தவமியற்றி வழிபடுவாயாக'' என்று கூறினார்.

உமையும் காஞ்சியை அடைந்து, அங்குள்ள ஒற்றை மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் அமைத்து அன்றாடம் முறையாக வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு வரும் நாட்களில், ஒருநாள் அம்மையின் உறுதிப்பாட்டை சோதிக்க எண்ணிய இறைவன் எல்லா நன்னீர் நதிகளையும் உருண்டுவரச் செய்தார். அவையெல்லாம் ஒன்று திரண்டு கம்பையாற்று நீருடன் சேர்ந்து ஊழிக்கால வெள்ளமென வந்தது. அதைக் கண்ட அம்மையார், 'இப்பெருவெள்ளம் இறைவன் மீது செல்லுமே, இனி யான் என் செய்வேன்' என்று உடல் அதிர்ந்து வளைக்கரத்தால் இறைவனை இறுகத் தழுவிக் கொண்டார். இறைவன் தன் திருமேனி குழைந்து தனத்தழும்பும், வளைத்தழும்பும் கொண்டதால் இறைவனும் தழுவக்குழைந்த பெருமான் ஆனார். .

முன்னொரு காலத்தில் சிவபெருமானிடம் வரம்பெற்று, உடல்கள் தோறும் கலந்து இருந்த பண்டாசுரனை வேள்வியில் எரித்தழித்தபின், உலகைப் படைக்கக் கருதி, பிரிந்து வந்து நின்ற நான்கு மறைகளை நோக்கி, ஒரு மாமரமாய் தளிர், பூ, காய், கனிகளுடன் விளங்கச் செய்தார். அதனடியில் சோதிவடிவமாய் எழுந்தருளி, தமது இடப்பாகத்தில் தேவியை உண்டாக்கினார். 


கைலாயத்தில் பார்வதி தேவிக்கு தொண்டு செய்து கொண்டிருந்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் ஊரில் சங்கிலி நாச்சியாராக பிறந்து சிவ தொண்டு புரிந்து கொண்டு இருந்தார். 

சமயக்குரவர் நால்வர்களில் ஒருவரான சுந்தரர் திருவாரூரில் பரவை நாச்சியார் என்பவரை  திருமணம் செய்தார். அவர் திருவொற்றியூருக்கு வந்தபோது, தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி இருந்ததை மறைத்து, அங்கிருந்த சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், சங்கிலி நாச்சியார் இறைவனை சாட்சியாக வைத்துதான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பினார். அதற்கேற்ப இறைவனின் திருஉளப்படி கோயிலில் இருந்த மகிழ மரத்தினைச்  சாட்சியாக வைத்து சங்கிலி நாச்சியாரை மணம் முடித்தார்.

பிறகு சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து செல்ல எண்ணியபோது, இறைவன் சுந்தரரின் கண் பார்வையைப் பறித்துவிட்டார். தன்னுடைய தவற்றுக்கு வருந்திய சுந்தரர், காஞ்சிபுரம் திருத்தலத்துக்கு வந்து ஏகாம்பரேஸ்வரரைப் பணிந்து, 'ஆலம்தான் உகந்து அமுது செய்தானை' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அதன் பயனாக, ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வை வந்தது. மற்றொரு கண்ணின் பார்வையை திருவாரூரில் பெற்றார் என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை வரலாறு.


 ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை 
  ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் 
 சீலந் தான்பெரி தும்முடை யானைச் 
  சிந்திப் பாரவர் சிந்தையு ளானை 
 ஏல வார்குழ லாள்உமை நங்கை 
  என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
 கால காலனைக் கம்பனெம் மானைக் 
  காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.. 
- திருஞானசம்பந்தர்

 கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்
 உண்டதோர் நஞ்ச மாகில் உலகெலாம் உய்ய உண்டான்
 எண்டிசை யோரும் ஏத்த  நின்றஏ கம்பன் றன்னைக்
 கண்டுநான் அடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.
- திருநாவுக்கரசர்

 வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
 கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
 அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
 எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.
- சுந்தரர்

கருத்துகள்