இறைவன் : திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர்
இறைவி: திருமேற்றளிநாயகி
தல மரம் : வில்வம்
தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது இரண்டாவது ஸ்தலமாகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
காஞ்சியில் 'பிள்ளையார் பாளையம்' என்னும் பகுதியில் இக்கோயில் உள்ளது; இதன் பெயரால் அவ்வீதி திருமேற்றளித் தெரு என வழங்கப்படுகிறது.
திருமால் சிவ சாரூப நிலையைப் பெற வேண்டி இறைவனை வழிபட்ட திருத்தலம்; இறைவன் காட்சி தந்து நின்றபோது திருமால் சிவசாரூப நிலையை வேண்ட, ஞானசம்பந்தர் இங்கு வருகைதந்து பதிகம் பாடும்போது அது கிடைக்கும் என்றும், அதுவரை இங்கிருந்து தவஞ்செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். அதன்படியே ஞானசம்பந்தர் வந்து பாடியபோது திருமால் சிவசாரூபம் பெற்றார் என்பது தல வரலாறு.

உள்ளே (கர்ப்பக்கிருகத்துள்) உள்ள இறைவன் 'ஓத உருகீசர் ' என்று வழங்கப்படுகின்றது; ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகியவர் (திருமால்) இவர் எனப்படுகிறது. இதற்கு அடையாளமாக சிவலிங்கத் திருமேனியின் முன்பு இருதிருவடிகள் உள்ளன.
கோயில் உள்ள இத்தெருவின் நடுவில் 'உற்றுக்கேட்ட முத்தீசர் ' ஆலயம் உள்ளது; ஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாகவும் - கேட்டதாகவும் வரலாறு.
மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த் தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏயமென் றோளி பாகர் இலங்குமேற் றளிய னாரே.
- திருநாவுக்கரசர்
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன் வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும் எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
- சுந்தரர்
கருத்துகள்