இறைவன் : ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்.
தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது மூன்றாவது ஸ்தலமாகும். தேவாரம் பாடப்பெற்ற 274 ஸ்தலங்களில் 235 ஆவது ஸ்தலமாகும்.
வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம்; ஆதலின் இது ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.
இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன.
சலந்தரன் வழிபட்டதாக சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது; இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவே சலந்தரேசம் எனப்படுகிறது;
இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார் என்பது வரலாறு.மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்; அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசை செய்ய லுற்றார் கையி லொன்றுங் காண மில்லைக் கழல டிதொழு துய்யின் அல்லால் ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் குய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் தளியு ளீரே.
- சுந்தரர்
கருத்துகள்