13. கச்சி அனேகதங்காவதம்

இறைவன் : அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர்.

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது நான்காவது ஸ்தலமாகும். 

அனேகதம் - யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.

அனேகதங்காபதம் என்ற பெயரில் இமயமலைச் சாரலில் ஒரு தலமிருப்பதால், அதனின்றும் வேறுபாடு அறிய இத்தலத்தை "கச்சி அனேகதங்காவதம்" என்றழைக்கப்படுகிறது.
பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு "வல்லபை' என பெயரிட்டு வளர்த்து வந்தார்.சிவபக்தையாக இருந்த அவளை இரணியபுரம் நகரத்திலுள்ள அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை மீட்டுவர எண்ணினார். அப்போது அம்பிகை சிவனிடம், விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன், இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும்முன்பு, இவ்விடத்தில் 
"அனேகபேஸ்வரர்" என்று சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து வழிபட்டார். பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர். விநாயகர் பிரதிஷ்டை செய்த அம்மூர்த்தியே இன்று அனேகதங்காவதேஸ்வரர் என்று திருநாமம் கொண்டு விளங்குகிறார். (அனேகபம் = யானை).

இது குபேரன் வழிபட்ட பெருமை மிக்க தலமும் கூட.


 தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு 
  மானதி டம்திகழ் ஐங்கணையக் 
 கோனை  எரித்தெரி யாடி இடங்குல 
  வான திடம்குறை யாமறையாம் 
 மானை இடத்ததொர் கையன் இடம்மத 
  மாறு படப்பொழி யும்மலைபோல் 
 யானை உரித்த பிரான திடங்கலிக் 
  கச்சி அனேகதங் காவதமே.
- சுந்தரர்

கருத்துகள்