14. திருமயிலை (மயிலாப்பூர்)

இறைவன் : கபாலீசுவரர்,
இறைவி : கற்பகாம்பாள் 


உமாதேவி, இறைவனை, மயில் வடிவங்கொண்டு பூஜித்த தலம்; எனவே இப்பெயர் பெற்றது. இத்திருக்கோலம் கோயிலினுள் வெளிச்சுற்றில் புன்னை மரத்தடியில் தனிக்கோயிலாக அமைக்கப்பெற்று வழிபடப்பெறுகிறது.
அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.



திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் அரவு (பாம்பு) தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து "மட்டிட்ட புன்னை" என்ற ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் நம்பிக்கை. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். 

இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி மகிந்துள்ளனர்.


 மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்    
 கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்    
 ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்    
 கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 
- திருஞானசம்பந்தர்

 மங்குல் மதிதவழும் மாட வீதி
  மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
 கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
  குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
 தங்கு மிடமறியார் சால நாளார்
  தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
 பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
  புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்