15. திருக்கள்ளில் (திருக்கண்டலம்)


தொண்டை நாட்டில் உள்ள  பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 18 ஆவது ஸ்தலம் ஆகும்.  திருஞான சம்பந்தர் இறைவன் சிவபெருமானைப் பற்றி பாடிய தலம் இது.

இறைவன் : சிவானந்தேஸ்வரர்.
இறைவி: ஆனந்தவல்லி.

சோழர் காலத்தில் கட்டப்பெற்ற இத்திருக்கோயில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  புராணங்களின் படி ராமனின் குழந்தைகளான லவனும், குசனும் திருக்கள்ளில் அருகில் உள்ள சிறுவாபுரி என்னும் ஊரில் வசித்து வந்துள்ளனர். அப்பொழுது அகர்கள் இருவரும் இத்திருத்தலத்திற்கு வந்து இங்கு உள்ள கொசஸ்தலை ஆற்றில் நீராடி சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. புராணகாலத்தில், இந்த இடம் கள்ளி மரங்கள் நிறைந்த காடாக இருந்ததனால் இவ்விடம் கள்ளில் என அழைக்கப்படுகிறது. இதன் மற்றொரு பெயர் திருக்கண்டலம் ஆகும். 

திருஞானசம்பந்தர்  திருவெண்பாக்கம் சென்று இறைவனை தரிசனம் செய்த பிறகு திருக்கள்ளில் வந்தடைந்தார். அப்பொழுது அவர் கொசஸ்தலை ஆற்றில் நீராடியபொழுது அவருடைய பூஜை சாமான்கள் அடங்கிய பெட்டியும், திருநீற்று பையும் காணாமல் போனது. அவற்றை தேடியபொழுது .அவர்  இவ்விடம் ஓர் சிவலிங்கம் கள்ளி மரங்களுக்கிடையில் காணப்பெற்றார். மேலும் காணாமற்போன தன்னுடைய பூஜை பெட்டியும், திருநீற்றுப்பையும் அங்கு இருப்பதை கண்டறிந்து நடந்தது அனைத்தும் இறைவனின் திருவிளையாடல் என்றறிந்தார்.  ஆதலால், அவர் இறைவனைப் பற்றி தனது பதிகத்தில் கள்வன் என்று குறிப்பிடுகின்றார்.




இத்திருத்தலம் பற்றிய மற்றுமொரு வரலாறு பிருகு முனிவருடன் தொடர்புடையது. முன்பு பிருகு முனிவர் சிவ பெருமானை மட்டும் வழிபடுபவராகவும் சக்தி (உமை) வழிபாடு செய்யாமலும் தவிர்த்து வந்தார். இதைக்கண்டு பார்வதி தேவி கோபம் கொண்டிருந்தார். பார்வதி தேவியின் கோபத்தை தணிக்கும் பொருட்டு, சிவபெருமான் சக்தி தக்ஷிணாமூர்த்தி வடிவம் கொண்டு பிருகு முனிவர் முன் தோன்றி சிவனும் சக்தியும் ஒன்றே எனக்கூறினார். தன் தவறை உணர்ந்த பிருகு முனிவர் அன்னையிடம் மன்னிப்பு கோர,  உமையும் அவர் எப்பொழுதும் ஆனந்தத்துடன் இருக்கும் படி வரம் அருளினார். எனவே இங்கு உள்ள அன்னை ஆனந்தவல்லி என்றழைக்கப்படுகிறார். பிருகு முனிவர் இறைவனை ஆயிரம் கள்ளி மலர்களைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சித்ததாகவும். பிருகு முனிவரின் தவம் கண்டு இறைவன் அவர் முன்னாள் சக்தி தக்ஷிணாமூர்த்தி (தட்சிணாமூர்த்தியின் மடியில் அன்னை சக்தி அமர்ந்துள்ள வடிவம்) வடிவத்துடன் எழுத்தருளியதாகவும், எனவே இறைவன் இங்கு ஸ்ரீ "திருகள்ளீஸ்வரன்" என்று அழைக்கப்படுவதாகவும்  ஒரு வரலாறு உண்டு.



 முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
 வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
 கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
 உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே. 

- திருஞானசம்பந்தர்

கருத்துகள்