17. குடமூக்கு (கும்பகோணம்)

இறைவன் : கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவி: மங்களாம்பிகை.

இது சோழ நாட்டில் காவிரி நதிக்கு தெற்கே உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 26 வது தலம் மற்றும் 143 வது தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.   

உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது.  அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்.

பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன.

இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன கும்பத்தின் வடிவம் உடையவர் என்பதால் எப்பொழுதும் தங்கக் கவசம் அணிவித்தே அபிஷேகம் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர்.


 அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
 மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
 குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
 இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.
- திருஞானசம்பந்தர்

 பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்
 காவ ணத்துடை யானடி யார்களை
 தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
 கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்