16. திருவாரூர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும்.

இறைவன் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர்.
இறைவி: அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்.

வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி என்று இன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிக்கப்படுகிறார்.

  • பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.
  • திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.
  • நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.
  • எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் 
  • பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.
  • சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம்.
  • சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி.
  • நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
  • கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
  • நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
  • தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

திருமால் ஒரு முறை புத்திரப்  பேறு வேண்டி சிவனை நோக்கித்  தவம் செய்தார்.  அத்தவத்தால் மகிழ்ந்து அம்மை, அப்பர் இருவரும் அவர் எதிரே தோன்றி அவர் வேண்டிய வரத்தை அருளினார்கள். அப்பொழுது திருமால் அம்மையை வணங்க தவறினார். அதனால் சினம் கொண்ட உமையாள், "இறைவன் அருளால் புத்திரன் உதித்தாலும் அவன் மாள்வான்"  என சபித்துவிட்டார். இதனால் கவலை கொண்ட திருமால் மீண்டும், சோமாஸ்கந்த மூர்த்தியான சிவன், முருகன், பார்வதி ஆகிய மூவரையும் ஒரு சேர எழுந்தருளசெய்து, அரியதொரு பூஜை செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த அம்மை "தமது சாபத்தின்படி பிறக்கும் மைந்தன் சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியால் மாண்டாலும் கூட மீண்டும் உயிர் பிழைக்கும் வல்லமை உடையவனாக இருப்பான்" என வரம் அருளினார். அப்படி பிறந்த புதல்வனே மன்மதன் ஆவான். இந்த சோமாஸ்கந்த மூர்த்தியே தியாகராஜ பெருமான். அவரே திருமாலின் மார்பினை அரங்கமாக கொண்டு ஸ்ரீபுரம் என்னும் திருவாரூரில் எழுந்தருளியுள்ளார். திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்;



தியாகராஜ பெருமான், பூலோகத்தில் எழுந்தருள வேண்டும் என்பதற்க்காக "வலன்" என்னும் அசுரனைத் தோற்றுவித்து, பெரும்படை கொண்டு இந்திரன் மீது படை எடுக்கச் செய்தார். இதுகண்டு அஞ்சி இந்திரன் திருமலை சரணடையவே, திருமாலும் இந்திரனிடம், "அந்த அசுரன் மானுடனின் கையால் மட்டுமே தனக்கு மரணம் என்னும் வரம் பெற்றுள்ளான். ஆகவே நீ பூவுலகில் உள்ள முசுகுந்த சக்கரவர்த்தியிடம் உதவியைப் பெற்று அவனை வெல்வாயாக!"   என்று கூறினார். அதன்படியே இந்திரனும் முசுகுந்த சக்கரவர்த்தியின் நட்பைப்பெற்று அவரின் துணைகொண்டு வலனை வென்றான். 

போரில் வெற்றி பெற்ற பின்னர், முசுகுந்த சக்கரவர்த்தியை தனது விருந்தாளியாக சில காலம் தேவலோகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தான். முசுகுந்தரும் அவ்வழைப்பை ஏற்று தேவலோகத்தில் சிலநாட்கள் தங்கியிருந்தபோது தங்களிடம் உள்ள காமதேனு, கற்பக விருட்சம், அமுத சுரபி முதலான தேவலோக ஐசுவரியங்களைக் காண்பித்தப்பின்னர், எழிலார்ந்த அமராவதியில் தியாகராஜர் கொலு வீற்றிருக்கும் ஆலயத்தை அடைந்தனர். முசுகுந்தர், பெருமானைக் கண்டமாத்திரத்தில் அவரருளால் கவரப்பட்டான். அச்சமயம் தியாகராஜர் அவர் மனதினில் தோன்றி, தாம் பூவுலகில் சோழ நாட்டில் "திருவாரூர்" என்னும் ஸ்தலத்தில் எழுந்தருள விரும்புவதால், இந்திரனிடம் தம்மை கேட்டுப்பெற்று திருவாரூரில் தம்மை நிலை பெறச் செய்யுமாறு இறைவன் பணித்தார். அதுகண்டு அகம் மகிழ்ந்த முசுகுந்தரும் அவ்வாறே செய்வதாக உறுதி கொண்டார்.  போரில் பெற்ற வெற்றியை கொண்டாட, இந்திரன் முசுகுந்தருக்கு தேவர்களை அறிமுகம் செய்து வைத்தும், அவருக்கு விலையுயர்ந்த பல பரிசுகள் அளித்தும் கௌரவம் செய்தான். மேலும் தேவேந்திரன் முசுகுந்தரை நோக்கி, " நண்பனே! நீ வேண்டும் வரத்தைக் கேள்; நீ செய்த உதவிக்கு பலனாக உனக்கு நான் அதனை அளிப்பேன்"  என வாக்குறுதி அளித்தான்.  தக்க சமயம் பார்த்துக் காத்திருந்த முசுகுந்தரும், " தேவர்களின் தலைவனே! நீர் வணங்கி வரும் தியாகேசப்பெருமானை யாம் பூவுலகில் கொண்டு சென்று பூஜிக்க விரும்புகிறேன். யாம் விரும்பும் அவ்வரத்தை எனக்களிப்பாய்" எனக் கோரினான். அதிர்ச்சியடைந்த இந்திரனும், தாம் பூஜிக்கும் தியாகேசரை கொடுக்க மனம் இல்லாதவனாய், " மன்னனே! திருமால் வைகுண்டத்தில் வைத்து பூஜிக்கப் பெற்ற மூர்த்தி இது. அவரின் அனுமதி பெற்ற பிறகே இதை நான் உனக்குத் தர இயலும்" எனக் கூறினான். இருவரும் பார் கடலில் பள்ளி கொண்டிருந்த திருமலை வணங்கி தத்தம் விருப்பத்தை எடுத்துக்கூறினார். 

தியாகராஜரின் உள்ளக்கிடக்கையை தனது யோக சக்தியால் அறிந்துகொண்ட திருமாலும் இந்திரனை நோக்கி, " அமரர் தலைவா! உதவி செய்தவர்களுக்கு அவர் விரும்பும் வண்ணம் வரத்தை அளிப்பதே முறையாகும். எனவே, நீ தியாகராஜரை முசுகுந்தனுக்கு கொடுப்பதே சிறந்தது" எனக் கூறினார். இந்திரன் தம்மிடம் உள்ள தியாகராஜரைக் கொடுக்க மனமில்லாமல் முசுகுந்தரை அன்று இரவு மட்டும் ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டி தான் காலையில் மீண்டும் மறுநாள் சந்திக்க வருவதாக கூறிச் சென்றான்.  இந்திரன் பின் தேவலோக சிற்பியான மயனை அழைத்து தன்னிடமிருந்த தியாகராஜர் போல் மேலும் ஆறு வடிவங்களை செய்து தருமாறு பணித்தான். மயனும் இந்திரனின் விருப்பத்தின் படி, ஒரே மாதிரியான ஆறு மூர்த்திகளை செய்தான். இந்திரன் அவைகளை வரிசையாகத் தனியே பெரிய பீடத்தில் எழுந்தருளச் செய்தான். 

மறுநாள் இந்திரன் முசுகுந்தனை தியாகராஜ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மணி மண்டபத்திற்கு அழைத்துச் சென்று, " நண்பனே! இங்கு உள்ள 7 தியாகராஜர் மூர்த்திகளின் உனக்கு வேண்டிய மூர்த்தியை தேர்வு செய்து கொள்!" எனக் கூறினான். ஏழு மூர்த்திகளையும் ஒரு சேரக் கண்ட முசுகுந்தரும் ஒரு கணம் திகைத்துப் போனான். பிறகு மனதை நிலைப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு மூர்த்தியாக வழிபட, இறைவன் மன்னனுக்கு சாமந்தி மலரின் இதழைக் காட்டி மறைந்தார். ஏழு தியாகராஜரையும் கவனித்த மன்னன், ஒரே ஒரு மூர்த்தியின் மீது மட்டும் சாமந்தி பூ இருப்பதை அறிந்து அதுவே தான் விரும்பிய தியாகராஜர் என்றறிந்து அதனை தேர்வு செய்தான்.  ஆச்சரியமடைந்த இந்திரனும், இறைவனின் திருவுளம்  இதுவே என்றறிந்து, மூல மூர்த்தியுடன் மற்ற ஆறு மூர்த்திகளையும் மன்னனிடம் தந்து அனுப்பினான். 

முசுகுந்தன் ஏழு மூர்த்திகளையும் ஒரு பெரிய தேரில் வைத்து திருவாரூருக்கு கொண்டு வந்து விழா நடத்தினான். பிறகு தியாகேசருக்கு ஆரூரில் ஆலயம் அமைத்து அங்கே வன்மீகநாதர் அருகே பிரதிஷ்டை செய்து பூஜிக்கத்த தொடங்கினான். ஏனைய மூர்த்திகளை முறையே, நாகப்பட்டினம், திருநள்ளாறு, வேதாரண்யம், திருக்காரவாசல், திருவாய்முர், திருக்குவளை என்னும் ஆறு தலங்களில் எழுந்தருளச் செய்தான். இவையே சப்த விடங்க ஸ்தலங்கள் என அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

திருவாரூரில் பிறக்க முக்தி, தில்லையில் தரிசிக்க முக்தி, காஞ்சியில்  வசிக்க முக்தி,  காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்கவே முக்தி என்பது வழக்குச் சொல்.இந்து சமயத்தில் முக்தி தரவல்லவர்களாக மும்மூர்த்திகள் உள்ளார்கள். இவர்களில் திருமாலும், பிரம்மாவும் ஆன்மாக்களின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப முக்தி தருபவர்களாகவும், சிவபெருமான் அனைவருக்கும் முக்தி தருபவராகவும் இருக்கிறார். ஏழு பிரளயங்களில் மகா பிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடி அண்ட சராசரங்களையும் தனக்குள் ஒடுக்குகிறார். அப்பொழுது அனைத்து உயிர்களுக்கும் கட்டாய முக்தியை சிவபெருமான் அளிக்கிறார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

 சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
  பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
 பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
  மறவா தேத்துமின், துறவி யாகுமே.
 துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
  நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.
 உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
  கையி னாற்றொழ, நையும் வினைதானே.
- திருஞானசம்பந்தர்

 மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
  மேனியான் தாள்தொ ழாதே
 உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
  யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
 கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
  மயிலாலும் ஆரூ ரரைக்
 கையினாற் றொழா தொழிந்து
  கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.
- திருநாவுக்கரசர்

 இறைகளோ டிசைந்த இன்பம்
 இன்பத்தோ டிசைந்த வாழ்வு
 பறைகிழித் தனைய போர்வை
 பற்றியான் நோக்கி னேற்குத்
 திறைகொணர்ந் தீண்டித் தேவர்
 செம்பொனும் மணியும் தூவி
 அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
 அப்பனே அஞ்சி னேனே.
- சுந்தரர்

கருத்துகள்