இறைவன் : சாட்சிநாதர், தம்பரிசுடையார்.
இறைவி : சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.
சோழ வள நாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் சைவ சமயக்குரவர்களால் பாடப்பெற்ற 100 ஆவது தலமாகும். புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பத்திரிவனம் என மூன்று பெயர்களை உடையது.
இத் தலத்தில் பூஜித்துவந்த சிவாச்சாரியாரின் மகள்கள் இருவருள் மூத்தவள் விஷ்ணு சர்மர் எனும் வேதியரை மனம் புரிந்திருந்தார். அவள் கணவன் யாத்திரை சென்று திரும்பியபொழுது, வைசூரி (அம்மை) நோயால் தாக்கப்பட்டு உருமாறிய தனது மனைவியை காணமுடியாது, அவளின் தோற்றத்தைப் பார்த்து, "இவள் என் மனைவியல்லள். இளையவளே என் மனைவி" என்று வாதிட, ஈசன் விண்மிசைத்தோன்றி, "நீ அந்நாள் மனம் கொண்ட அவள் இவள்" என சாட்சியாக நின்று அருள் பாலித்ததால் இறைவனுக்கு சாட்சிநாதர் எனப் பெயர் வழங்கப்பெற்றது.அம்மை வார்க்கப்பெற்ற சிவாச்சாரியாரின் மூத்தமகள், இத் தல தீர்த்தத்தில் மூழ்கி, உடல் வனப்பும், இழந்த கண்ணையும் பெற்றாள்.
கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித் தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக் கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
- திருஞானசம்பந்தர்
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத் தேற்றுவான் சென்று சொல்ல, “சிக்கெனத் தவிரும்!” என்று, வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன் ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்