20. திருவெண்ணியூர் (கோயில்வெண்ணி)



இறைவன் : வெண்ணிக்கரும்பர், வெண்ணிநாதர்.
இறைவி : அழகிய நாயகி, சௌந்தரநாயகி.

தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 165 ஆவது ஸ்தலம் ஆகும். 

முன்பு இவ்விடம் முழுவதும் கரும்பு காடாக இருந்தது. தல யாத்திரை மேற்கொண்ட முனிவர்கள் கரும்புக் காட்டிற்கு இடையில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனைக்கண்டு வணங்கினார்கள்.  அவர்களுள் சிலர் கரும்பு காட்டிற்கு இடையில் இறைவன் எழுந்தருளியுள்ளதால் தல விருட்சம் கரும்பு என்றனர்.  மற்றும் சிலர் வெண்ணியே   (நந்தியாவட்டை)  தல விருட்சம் என்றனர். அப்பொழுது இறைவன் அசரீரியாக தோன்றி, கரும்பும், வெண்ணியுமே இத்தல விருட்சமாக இருக்கட்டும் எனக்கூறினார். அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தலவிருட்சத்தின் பெயரால் இவ்வூர் திருவெண்ணியூர் என அழைக்கப்பெற்றது. காலப்போக்கில் இதுவே மருவி கோவில்வெண்ணி ஆனது. 

இங்குள்ள இறைவனின் திருமேனி (அதாவது பாணத்தில்) கரும்பு கட்டுக்களாக கட்டப்பட்டிருப்பது போன்று காட்சி தருகிறார்.

நீரழிவு (சர்க்கரை) நோயால் பாதிக்கப்பெற்றவர்கள், இங்கிருக்கும் இறைவனை வலம் வந்து, சர்க்கரையும், ரவையும் சம அளவில் கலந்து எறும்புக்கு உணவாக அளித்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

 சடையானை, சந்திரனோடு செங்கண் அரா 
 உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும் 
 விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை 
 உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
- திருஞானசம்பந்தர்

 முத்தினை, பவளத்தை, முளைத்த எம் 
 தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப் 
 பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர் 
 நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்