23. இரும்பூளை - (ஆலங்குடி)

இறைவன் : காசியாரண்யேஸ்வரர், ஆபத்சகாயர்.
இறைவி : ஏலவார் குழலி.


சோழ வள நாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 98 ஆவது ஸ்தலம் ஆகும். இத்தலம் 161ஆவது திருமுறைத்தலமாகக்  கருதப்படுகிறது.   இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். விசுவாமித்திரர் வழிபட்ட தலம். 
கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த பெருமானுக்குரிய தலமாதலாலும் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலத்தை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதாலும் ஆலங்குடி என்று பெயர்.

இதற்குச் சான்றாகச் சொல்லப்படும் காளமேகப் புலவர் பாடல் :- 
 ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை 
 ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் - 
 ஆலம் குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் 
 மடியாரோ மண் மீதினில்.
சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார்

இக்கோயிலின் வெளியே சுந்தரர் சிலை தற்போது சற்று சேதமடைந்தது போல் தெளிவற்ற உருவத்துடன் உள்ளது. சுந்தரர் சிலை திருவாரூருக்கு ஒரு மன்னனால் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருக்க விரும்பாமல், ஒரு அர்ச்சகரின் உதவியோடு மீண்டும் ஆலங்குடிக்கே திரும்பியது. தெட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் இந்த சிலையும் இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போட்டிருந்தது. இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.  

 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
 வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
 ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
 காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்