25. திருவிடைமருதூர்

காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 30 ஆவது சிவத்தலம் மற்றும் 147 ஆவது  பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். 

இறைவன் : மருதவாணர், மகாலிங்கேசுவரர்
இறைவி : பிருகச்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை.

மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டுள்ள மூன்று தலங்களான திருப்பருப்பதம்(வடநாடு), சோழநாட்டுத் திருஇடைமருதூர் மற்றும் திருப்புடைமருதூர்(பாண்டியநாடு) ஆகியவற்றுள் இது இடையாக உள்ளது. இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.  

வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் " பிரம்மஹத்தி " தோஷ நிவாரண தலம் இது. 

வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசன் ஒருமுறை அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. 

சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். 


இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்

சம்பந்தர் இங்கு வந்தபோது, வழியெல்லாம் சிவலிங்கமாகத் தோன்றியது. எனவே தரையில் கால் பதிக்க அவர் அஞ்சினார். அப்போது, சிவன் அம்பிகையை அனுப்பினார். அவள், சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இவளே பிரகாரத்தில் மருதவாணருடன் (சிவன்), கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை "அன்பிற்பிரியாள்' என அழைக்கின்றனர். தட்சிணாமூர்த்தி இங்கு அம்பிகையுடன் காட்சி தருகிறார். இவருக்கு "சாம்ப தட்சிணாமூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சந்நிதியின் முன் மண்டபத்தில் சுதை சிற்பமாக விளங்குகிறார். மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, தோஷம் நீங்க இங்கு சிவனை வழிபட்டாள். சிவன் விமோசனம் அளித்ததோடு, மணம் செய்து கொண்டார்.
 .
 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை    
 காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்    
 வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து    
 ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.
- திருஞானசம்பந்தர்

 காடுடைச் சுடலை நீற்றர் 
 கையில்வெண் டலையர் தையல்
 பாடுடைப் பூதஞ் சூழப் 
 பரமனார் மருத வைப்பிற்
 தோடுடைக் கைதை யோடு 
 சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
 ஏடுடைக் கமல வேலி 
 இடைமரு திடங்கொண் டாரே.
- திருநாவுக்கரசர்

 கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
 கைப்பர் பாழ்புக மற்றது போலப்
 பழுது நான்உழன் றுள்தடு மாறிப்
 படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்.
- சுந்தரர்

கருத்துகள்