26. பட்டீச்சரம்

காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 23ஆவது சிவத்தலம்  மற்றும் 140ஆவது  பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.

இறைவன் : பட்டீச்சுரர், தேனுபுரீஸ்வரர்.
இறைவி : ஞானாம்பிகை, பல்வளை நாயகி.
தல மரம்: வன்னி



  • காமதேனுவின் மகள் பட்டீ இறைவனை பூசித்தால் பட்டீச்சுரம் என வழங்கப்பெற்ற ஸ்தலம்.
  • ராமபிரானும் தனது சாயாஹத்தி தோஷம் நீங்க, வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.
  • விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப் பெற்ற ஸ்தலம் 
  • இங்குள்ள துர்க்கை சோழர் காலப் பிரதிஷ்டை

திருஞான சம்பந்தர் அடியரர்களுடன் நடந்து  திருசக்திமுற்றத்திற்கு வந்து இறைவனை தரிசித்த பிறகு, பட்டீச்சுரம் சென்று இறைவனை தரிசிக்க புறப்பட்டார்.  அப்போது சூரியன் மிதுனராசியில் பிரவேசிக்கும் முதுவேனிற் காலமாதலால் வெய்யிலின் கொடிய வெப்பத்தை தணிக்க பட்டீச்சுர இறைவன் சம்பந்தருக்கு பூத கணங்கள் மூலமாக அழகிய முத்து பந்தலை அனுப்பிவைத்தார். பூத கணங்கள் சம்பந்தருக்கு தெரியாதவண்ணம் அவரது திருமுடிக்கு மேலே முத்து பந்தலை இறைவன் ஆணையின் படி பிடித்து வந்ததையும் பின்னர் அவரிடம் கூறினர். சம்பந்தர் இறைவனின் திருக்கருணையை எண்ணி வியந்தவாறே முத்துப்பந்தலின் நிழலில் நடந்து வந்தார். இவ்வற்புத காட்சியைக் காணவும், திருஞான  சம்பந்தர் தம்மை தரிசிக்கவும் நந்தி தேவரை விலகியிருக்கும் படி எம்பெருமான் கட்டளையிட நந்தியும் விலகி நின்றது (ஐந்து நந்திகள் உள்ளன) . சம்பந்தரும் கோயிலின் உள் நுழைந்து பட்டீஸ்வரரைத் தரிசித்து "பாடல் மறை " எனது தொடங்கும் பாமாலை பாடினார். 



பாடன்மறை சூடன்மதி பல்வளையொர் பாகமதின் மூன்றொர்கணையால்
கூடவெரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.

- திருஞானசம்பந்தர்

கருத்துகள்