பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 3ஆவது பாடல் பெற்ற சிவத்தலம் மற்றும் 217ஆவது தேவார பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.
இறைவன் : பரங்கிரிநாதர்.
இறைவி : ஆவுடைநாயகி.
- ஹரிச்சந்திரன் வழிபட்ட திருத்தலம்.
- முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற திருத்தலம். அறுபடைவீடுகளில் ஒன்று.
- பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி,
- நக்கீரர் வாழ்ந்த ஊர்
- முருகனுக்குப் பரிகாரம் அருளிய மீனாட்சிசுந்தரபுரம்,
- இறைவனே மலைபோல் தோற்றம் தருவதால், 'பரங்கிரி’ என்று பெயராம்.
ஒருமுறை, திருக்கயிலாயத்தில் பார்வதிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவனார். அப்போது, தாயின் மடியில் சிறு பிள்ளையாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார் முருகன். அன்னை, உபதேசத்தை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்க, குழந்தையும் அப்பா சொன்னதைக் கேட்டுத் தலையாட்டியதாம். என்னதான் சிவகுமாரன் என்றாலும், குரு வழியாகக் கேட்கவேண்டியதை, நேரடியாகக் கேட்பது என்பது குறுக்கு வழியைப் போன்றது. அதனால், முருகப் பெருமானும் பரிகாரம் தேடினார். பூலோகத்தில் தவம் செய்வதற்கு தக்க இடம் தேடிய முருகன், பரங்குன்றமே பாங்கான இடம் என்று அறிந்து, இங்கு வந்து தவமியற்றினார். அப்போது அவருக்கு அம்மையும் அப்பனும் காட்சி தந்தனர். அவர் களே ஸ்ரீஆவுடைநாயகி- ஸ்ரீபரங்கிரிநாதர் என்றும் வழங்கப்பட்டனர்.
ஒருமுறை, வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பலசாலி என்று போட்டி. அப்போது, மேரு மலையைத் தங்களுடைய போட்டிக்களம் ஆக்கினார்கள். வாயுதேவன், தனது பலத்தையெல்லாம் உபயோகித்து மலையைப் பிடுங்கியெறியப் பார்த்தான். ஆதிசேஷன், அதை நகரவிடாமல் பிடித்து அமிழ்த்தி, தான்தான் பலசாலி என்று நிரூபிக்க நினைத்தான். இந்தப் போட்டியில், மேருவின் சில சிகரங்கள் தனியாகப் பிரிந்துவந்து நெடுந் தூரத்தில் விழுந்தன. அப்படிப்பட்ட சிகரங்களில் ஒன்று தான் பரங்குன்றம் ஆயிற்றாம். மேருவோடு இருந்தபோது, இதற்கு 'ஸத்பம்’ என்று பெயராம்.
நாடு இழந்து, மனைவி- மக்களை இழந்து வாடியபோதும், சத்தியத்தை மீறமாட்டேன் என்கிற உறுதியோடு இருந்த அரிச்சந்திர மகாராஜா, இந்தப் பகுதிக்கும் வந்தார். இங்கே பகவானே சத்யமாகவும் மலையாகவும் உறைவதை உணர்ந்து வழிபட்டார். சத்யமாக, உண்மையாக இறைவன் உறையும் தலம் என்பதால், இந்தத் தலத்துக்கு 'சத்யகிரி’ என்றும், கடவுளுக்கு 'சத்யகிரீஸ்வரர்’ என்றும் பெயர்கள். சத்யத்தின் வழியில் தன்னை வழிநடத்திய ஆண்டவனுக்கு நன்றிக்கடனாக, கோயில் கட்டிப் பிராகாரங்களும் எழுப்பினார் அரிச்சந்திரன் என்கிறது சத்யகிரி மஹாத்மியம்.
நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை சூடலன்அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில் ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம் பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
- திருஞானசம்பந்தர்
கோத்திட்டையுங் கோவலும் கோயில்கொண் டீர்உமைக் கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச் சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ் சில்பூத மும்நீ ரும்திசை திசையன சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழநும் அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந் தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம் படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
- சுந்தரர்
கருத்துகள்