சைவ சமயக்குரவர்களால் பாடப்பெற்ற 55 ஆவது தலமாகும்.
இறைவன்: நடராசர், ஆனந்த நடராஜர், அம்பலகூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், திருமூலட்டானேசுவரர், கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.
இறைவன்: நடராசர், ஆனந்த நடராஜர், அம்பலகூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், திருமூலட்டானேசுவரர், கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.
இறைவி: சிவகாமி, சிவகாமசுந்தரி.
காலபுருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி 'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும்', காசி 'புருவமத்தி'யாகவும், சிதம்பரம் 'இருதயஸ்தான'மாகவும், சொல்லப்படும்.
- பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம்.
- பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.
- மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்தத் தலம்
- திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இத் தலம் தான்.
- திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தத் தலம்.
- இராசராசன் வேண்டுதலின்பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைக்கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்விகத் தலம்.
இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
மஹாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் பள்ளிகொண்டிருக்கையில் ஆதிசேஷன் பாரம் தாங்காமல் தவிக்க, இறைவனைக் காரணம் கேட்கிறார். மகாவிஷ்ணுவும் தன் உள்ளத்துள்ளே நடனமாடும் நர்த்தனசுந்தரநடராஜரின் அருட்கோலத்தையும் நடனத்தையும் ரசித்தே தான் அஜபா ஜபம் (மனதிற்குள்ளாகவே ஜபித்தல்) ஜபித்ததையும் கூறத் தானும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய் ஆதிசேஷன் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று. பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசிஷ்டரின் மனைவி.
ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்துத் தில்லை வந்து வியாக்ரபாதரோடு சேர்ந்து திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதும், அங்கேயும் பெருமாள் ஶ்ரீகோவிந்தராஜராக வந்து ஈசனின் திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதாகவும், தாம் கண்ட இக்கோலத்தை இவ்வுலக மக்களும் காணவேண்டி அவ்வண்ணமே காட்சி தரப் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் பிரார்த்தித்ததும், அவ்வாறே இன்றுவரை இருவரும் காட்சி தருவது.
இந்தக் கோயிலில் நடராஜர் வருமுன்னேயே வியாக்ரம பாதர் ஆசிரமமும், பதஞ்சலி முனிவரின் ஆசிரமமும் இருந்து வந்ததாயும் அவர்கள் சிவனைக் குறித்துத் தவம் செய்து வந்தார்கள். சிவனுக்குப் பூஜை செய்யப் பூக்கள் பறிக்கவும், மற்ற வேலைகளுக்கு உதவியாக இருக்கவும் வியாக்ரம பாதர் புலிக்கையும், காலும் வேண்டிப் பெற்றுக் கொண்டதாய்ச் சொல்வார்கள். பதஞ்சலியோ ஆதிசேஷனின் அவதாரம் ஆவார். பதஞ்சலி முனிவரும், வ்யாக்ரமபாதரும் இங்கே தவம் செய்யும் காலத்தில் சிவனின் ஆனந்த தாண்டவத்தின் காட்சியைக் காண விரும்பினார்கள். பதஞ்சலி முனிவரும், வ்யாக்ரமபாதரும் மற்ற ரி்ஷி முனிவர்களும் முதலில் தானாக உருவான ஒரு சிவலிங்கத்தைத் தான் வணங்கி வழிபட்டு இருக்கிறார்கள். பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் செய்த இடைவிடாத தவத்தினால் மனம் மகிழ்ந்தார் ஈசன். ஈசனும் அவர்களுக்கு அருளப் பிரசன்னம் ஆனபோது அவர்கள் இறைவனின் ஆனந்தக் கூத்தைப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என வேண்ட, இறைவன் தாண்டவம் ஆடத் தயாராக இருக்கும் வேளையில் அன்னையவள் அங்கே வந்து வழி மறித்தாள். ரிஷி, முனிவர்கள் பார்த்திருக்கப் இரண்டு பேரும் ஆடுகிறார்கள். ஆட்ட வேகத்தில் அவர் காதுக் குழை கழன்று கீழே விழ அதை அந்த ஆடும் வேகத்திலும் கவனித்த இறைவன் தன் இடது காலால் அந்த வலதுக் குழையை எடுத்துக் கொண்டு அந்தக் காலை அப்படியே மேலே தூக்கிக் காது வரை கொண்டு போய்க் குழையை மாட்டிக் கொள்கிறார் வலது காதில். இந்தத் தாண்டவக் கோலம் “ஊர்த்துவத் தாண்டவம்” என்று சொல்லப் படுகிறது. காளி தோற்றுப் போனாள். தன்னுடைய இடத்தை கொடுத்து விட்டுப் போகிறாள். நீ இந்த ஊர் எல்லையில் காவல் காத்து வா என்று ஆணை இடுகிறார். அவ்வாறே காளி ஊர் எல்லைக்குச் செல்கிறாள். நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் ஆவலுடன் பார்த்து ரசிக்கிறார்கள். இறைவனை அங்கேயே கோயில் கொள்ள வேண்டுகின்றனர். இறைவனும் இசைகிறான். அப்போது அவர் தன்னுடன் காசி நகரில் இருந்து 3,000 வேத விற்பன்னர்களை வரவழைத்தார். இந்த வேத விற்பன்னர்கள் தான் சிதம்பரம் தீட்சிதர்கள். முதன் முதல் இந்தக் கோவில் இருந்த இடத்தில் தில்லை வனங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் காளி தான் கோயில் கொண்டு இருந்திருக்கிறாள். இந்தக் காளி இருந்த இடம் தான் தற்சமயம் “நிருத்த சபை” என அழைக்கப் படுகிறது.
இந்திரன் கேட்டுக் கொண்டதின் பேரில் விஸ்வகர்மா என்ற தேவசிற்பியால் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் “ஆனந்தத் தாண்டவம்” ஆடக் கட்டப் பட்டது சித்சபை என்னும் மூலஸ்தானம். சிதம்பரம் கோயிலின் நடுவில் உள்ளது இந்தச் சித்சபை. இதை ஹேம சபை, தாப்ர சபை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். பக்தி இலக்கியத்தை வளர்த்த நம் நாயன்மார்களால் “பொன்னம்பலம்” என்று உருகி உருகிப் பாடப் பட்டது இது. முதலாம் பராந்தக சோழனால் பொற்கூரை வேயப் பட்டது. தெற்கே பார்த்து இருக்கும் இந்தச் சித்சபையில் தான் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கிறார். “சித்” என்றால் “ஞானம்” என்றும் “அம்பரம்” என்றால் “ஆகாசம்” என்றும் பொருள். நடராஜரையும் சிவகாம சுந்தரியையும் தவிர அங்கே “சந்திர மெளீஸ்வரர்” என்னும் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இந்த லிங்க ஸ்வரூபமும் தீட்சிதர்களால் தினப்படி பூஜிக்கப் படுகிறது. தன் தலையில் தான் சூடிக் கொண்டிருக்கும் இளம்பிறையின் குளிர்ந்த மதுரமான கிரணங்களால் நடராஜர் இதைச் செய்தார் எனச் சொல்லப் படுகிறது. தன்னுடைய பிரதிநிதிகளாக தீட்சிதர்களை நியமித்துத் தினசரி பூஜை செய்யும்படி பணித்தார் எனச் சொல்கிறார்கள். வெள்ளை வெளேரென இருக்கும் ஸ்படிக லிங்கத்தைத் தவிர இன்னொரு நடராஜரின் பிரதியும் இங்கே உள்ளது. இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். அது தான் “ரத்ன சபாபதி”!
ஒரு முறை பிரம்மா கங்கைக் கரையில், காசி நகரில் “அந்தர்வேதி” என்னும் இடத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்தார். அப்போது அவருக்கு வேதங்களை முற்றும் கற்று உணர்ந்த அந்தணர்கள் தேவைப் படவே ஈசனை நாட அவர் தம் பூத கணங்களை வைத்துச் செய்யச் சொல்லப் பூதகணங்கள் பிராமணர்களாய் மாறி அங்கு வந்தனர். பின்னர் இந்தப் பூத கணங்கள் ஏற்கெனவே ஈசன் தன் நடனத்திற்குத் தில்லையைத் தேர்ந்தெடுக்க அவரோடு இருக்க வேண்டி அங்கே சென்றுவிட்டனர். அவர்களே சிதம்பரம் தீக்ஷிதர்கள் எனப்பட்டனர். இந்தச் சிதம்பரம் தீட்சிதர்களையே மீண்டும் தன் யாகத்துக்காக பிரம்மா நாடினார். அவர்களும் அவர்களின் குருவான வியாக்ரபாதரின் உத்தரவின் பேரில் காசியை வந்து அடைந்தனர். யாகமும் இனிதே முடிந்தது. மதிய நேரம் ஆகவே பின் ஒரு பெரிய சமாராதனை செய்து தீட்சிதர்களை உபசரித்து “வைஸ்வதேவம்” என்னும் விருந்து உபசாரம் செய்ய முடிவு செய்தார் பிரம்மா. ஒவ்வொரு பெரிய யாகத்துக்குப் பின்னும் யாகம் செய்ய உதவும் அந்தணர்களை உபசரிக்கும் முறை அது.
ஆனால் தீட்சிதர்களோ தினமும் சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்து விட்டே பின் தங்கள் உணவை ஏற்கும் பழக்கம் உள்ளவர்கள். காசியிலோ நடராஜர் இல்லை. நடராஜ தரிசனம் கிடைக்காமல் தாங்கள் வரமுடியாது என அவர்கள் தெரிவிக்க செய்வதறியாத பிரம்மா சிவபெருமானின் உதவியை நாடினார். சிதம்பரம் தீட்சிதர்களோ நாங்கள் திரும்பச் சிதம்பரத்துகே போகிறோம். என்று கூறுகிறார்கள். யாகத்தின் பலனே இல்லாமல் போய்விடுமே என்று கலங்கிய பிரம்மாவின் உதவிக்கு அந்த ஆதிசிவனே நடராஜ ஸ்வரூபத்தில் தோன்றினார் . திகைத்துப் போன தீட்சிதர்களும், மற்றவர்களும் அந்த நடராஜரைத் துதி செய்து சந்தனம், தேன், பால் போன்றவற்றால் அபிஷேஹ ஆராதனைகள் செய்து அந்த நடராஜரை வழிபட்டனர். காசியிலே தீக்ஷிதர்கள் வழிபட வேண்டி நடராஜராய்த் தோன்றிய அந்த அர்ச்சாவதார மூர்த்தியே பின்னர் அவர்கள் வழிபட்டதற்குப் பின்னர் அப்படியே ரத்தின சபாபதியாக மாறினார். தீட்சிதர்களுக்கே அந்த நடராஜ ஸ்வரூபத்தை அளித்தார் பிரம்மா. தீட்சிதர்கள் திரும்பிச் சிதம்பரம் வரும்போது அந்த நடராஜரையும் தங்களுடன் எடுத்து வந்தனர். அன்று முதல் ரத்தின சபாபதிக்கு தினமும் 2-ம் காலப் பூஜை (காலை 10 மணி அளவில்) செய்யப் படுகிறது. நடராஜர் “மாணிக்ய மூர்த்தி” என்ற பெயரையும் பெற்றார்.
இந்தச் சபைக்குச் செல்ல வெள்ளியில் ஆன படிகள் ஐந்து இருக்கின்றன. இவை “நம சிவாய” என்னும் பஞ்சாட்சரத்தைக் குறிக்கும். சிவனின் ஐந்து விதத் தோற்றங்களைக் குறிக்கும் என்றும் சொல்கின்றனர். சிவனின் ஐந்து விதத் தோற்றங்கள். பிரம்ம பீடம், வி்ஷ்ணு பீடம், ருத்ர பீடம், மஹேஸ்வர பீடம், சதாசிவ பீடம். சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.
பிரம்ம பீடம்: இங்கே 28 மரத் தூண்கள் இருக்கின்றன. இவை 28 விதமான ஆகமங்களைக் குறிக்கிறது.
விஷ்ணு பீடம்: இங்கே உள்ள 5 தூண்களும் ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.
ருத்ரபீடம்: இங்கே உள்ள 6 தூண்களும் ஆறுவிதமான சாஸ்திரங்களைக் குறிக்கும். தர்க்கம், வ்யாகரணம், வேதாந்தம், மீமாம்சம், ஜோதிடம், வைத்தியம் போன்றவை அவை.
மஹேஸ்வர பீடம்: கிழக்கே உள்ள இந்தப் பீடத்தில் சந்தங்கள், கல்பங்கள், ஜோதிஷம், நிருத்தம், வ்யாகர்ணம், சிக்ஷை, போன்ற ஆறும் ஸ்தம்பங்களாயும், வைசேசிகா, பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சாங்கியம், கெளடம் போன்ற தத்துவங்கள் தூண்களாயும் இருக்கின்றன. இதற்கு மேல் உள்ள பிரணவ பீடத்தில்தான் நடராஜர், சிவகாமியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.
சதாசிவ பீடம்: 4 வேதங்களும் 4 பொன்னாலாகிய தூண்களாய் உள்ளன இங்கு. இங்கே தான் “சிதம்பர ரகசியம்” தரிசனம் கிடைக்கும்.
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
- மாணிக்கவாசகர்
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
- திருஞானசம்பந்தர்
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.
- திருநாவுக்கரசர்
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந் தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
- சுந்தரர்
கருத்துகள்