29. திருவேட்களம்


தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 56 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 2 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.

இறைவன் : பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்.

இறைவி : சற்குணாம்பாள், நல்லநாயகி.



`அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான்.

சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியை கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான்.


சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். அர்ஜுன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராதமூர்த்தியாக பாரவதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன.







திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார்

   
  அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்        
  ஆரழல் அங்கை அமர்ந்திலங்க        
 மந்த முழவம் இயம்ப           
  மலைமகள் காணநின் றாடிச்          
 சந்த மிலங்கு நகுதலை கங்கை           
  தண்மதி யம்மய லேததும்ப           
 வெந்தவெண் ணீறுமெய் பூசும்           
  வேட்கள நன்னக ராரே. 
- திருஞானசம்பந்தர்

 வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
 ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
 பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
 காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.
- திருநாவுக்கரசர்


கருத்துகள்