31. திருக்கழிப்பாலை

தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 58 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 4 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.




இறைவன் - பால்வண்ணநாதர்.
இறைவி - வேதநாயகி.

இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது.

கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது.

முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த சகரன் எனும்  மன்னனது அசுவமேத யாகக் குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது.

வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து அந்த லிங்கத்தையே பூஜிக்கும் படி கூறினார்.  இன்றும்  குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

 புனலா டியபுன் சடையாய் அரணம் 
 அனலா கவிழித் தவனே அழகார் 
 கனலா டலினாய் கழிப்பா லையுளாய் 
 உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 
- திருஞானசம்பந்தர்

 நங்கையைப் பாகம் வைத்தார் 
 ஞானத்தை நவில வைத்தார்
 அங்கையில் அனலும் வைத்தார் 
 ஆனையின் உரிவை வைத்தார்
 தங்கையின் யாழும் வைத்தார் 
 தாமரை மலரும் வைத்தார்
 கங்கையைச் சடையுள் வைத்தார் 
 கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
- திருநாவுக்கரசர்

 செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும்
 அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே
 முடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும்
 வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.
- சுந்தரர்

கருத்துகள்