தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 59 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 5 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.
இறைவன் - சிவலோகத் தியாகேசர்,பெருமணமுடைய மகாதேவர்..
திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி இத்தலத்தில் வாழ்ந்து வந்த நம்பாண்டார் நம்பி என்பாரின் மகளை திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். இருவினைக்கு வித்தாகிய இல்லற வாழ்க்கை நம்மைச் சூழ்ந்ததே என வருந்தி இவளொடும் இறைவன் திருவடி புகுதலே ஏற்றதாகும் என எண்ணிய வேளையில், கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது.
சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.
என்று நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.
சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற் பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர் நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்