34. தென்திருமுல்லைவாயில் (திருமுல்லை வாசல்)

தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 61 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 7 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.





இறைவன் - முல்லைவன நாதர். 
இறைவி - கோதையம்மை. 

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை.  

முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது.அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய வளவன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார்.எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.

 துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் 
 நடமன்னு துன்னு சுடரோன் 
 ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த 
 உமைபங்கன் எங்கள் அரனூர் 
 களிமண்டு சோலை கழனிக் கலந்த 
 கமலங்கள் தங்கு மதுவின் 
 தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு 
 திருமுல்லை வாயி லிதுவே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்