தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 67 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 13 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.
இறைவன் - சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர்.
இறைவி - நீலோத்பலவிசாலாட்சி, காவியங்கண்ணி.
ஆதியில் இத்தலத்தின் பெயர் சுவேத விருஷபபுரம். திருமால் வெள்விடையாக உருக்கொண்டு இறைவனை பூசித்து தாங்கிய இடம். காலப்போக்கில் வெள்விடை வெள்ளடையாக மருவி விட்டது. ஞான சம்பந்தரும், சுந்தரரும் ஸ்வாமியை "வெள்ளடை" என்றே பாடியுள்ளார்கள். ஸ்வாமியின் மற்றொரு பெயர் "ரத்னாங்குரேஸ்வரர்". பரத்வாஜன் எனும் அந்தணனுக்கு நேர்ந்த வறுமையை போக்குவதற்கு குபேரனைக் கொண்டு விலை மதிப்பற்ற ரத்தினங்களை அருளியதால் இப்பெயர் பெற்றார்.
அக்னி பகவான் புறா வடிவம் எடுத்து சிபி சக்கரவர்த்தியை சோதித்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தால் புறா வடிவம் நீங்கவில்லை. தன மூக்கினால் காவிரியிலிருந்து ஒரு நதியை உண்டாக்கி, அந்த நீரைக் கொண்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து மீண்டும் பழைய வடிவைப் பெற்றதால் திருக்குருகாவூர் எனப் பெயர் பெற்றது.. புறா உண்டாக்கிய நதி "புறா நதி" என்று பெயர் பெற்றது. காலப் போக்கில் புறவாய்க்காலாக மாறிவிட்டது.
திருஞான சம்பந்தரோடு வாதில் தோற்ற சமணர்கள், தாங்களாகவே கழு மரம் ஏறி உயிரை மாய்த்துக் கொண்டனர். அதற்க்கு பொறுப்பேற்று தனக்கு தோஷம் உண்டாயிற்று என்று கருதி தோஷம் நீங்க சம்பந்தர் காசிக்குச் சென்று கங்கையில் நீராட விரும்பினார்.
சிவபெருமான் சம்பந்தரின் விருப்பத்தை நிறைவேற்ற கங்கையை தை அமாவாசை அன்று இத்தலத்தில் உள்ள வெள்ளிவிடை தீர்த்தத்தில் (பால் கிணறு) வரவழைத்து சம்பந்தரை நீராடக் செய்தார். சம்பந்தருக்கு ஏற்பட்ட தோஷமும் நீங்கியது.
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சீர்காழியை வலமாக வந்து அடியார் கூட்டத்துடன் திருக்குருகாவூர் சென்றார். அது வெயில் காலமாதலால், தண்ணீரின் வேட்கையாலும், பசியாலும் சுந்தரரும், அடியவர்களும் துன்புற்றனர். அவர்கள் படும் துன்பத்தைப் போக்க வெள்ளிடைநாதர், அவர்கள் வரும் வழியில் எதிர்கொண்டு, வேதியரைப் போல் வேடம் பூண்டு, விசாலமான தண்ணீர் பந்தல் அமைத்து அதில் அவர்களை களைப்பாறச் செய்து, அவர்களுக்கு மணமுள்ள சுவையான குளிர்ந்த நீரையும், ஒரு பொதிசோறும் கொடுத்து ஓய்வாரச்செய்தார்,
சிறிது நேரம் கழித்து களைப்பு நீங்கப் பெற்ற சுந்தரரும் அடியார்களும், கண் விழித்தபோது அவர்கள் இருந்த பந்தலையும் காணவில்லை, உணவு கொடுத்த அந்தணரையும் காணவில்லை. வந்தவர் சிவபெருமான் என்பதை உணர்ந்துகொண்ட சுந்தரரும் திருப்பதிகம் பாடிக் கொண்டே ஆலயத்திற்கு வந்தடைந்தனர்.
பாணமோ குறுகி சதுரான பீடத்தமர் வெள்ளடையானம்பிகையங் கண்ணி யோடு கண்டார் பிறவிப் பயனெய்து வரே மகரத்து மதிமறைய பாற்கேணி நீராடி தொழுதார் துயரேதுவாகிலுங் கருகும் பாரு.
- கொங்கணச் சித்தர்
சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந் தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார் விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.
- திருஞானசம்பந்தர்
மகரத்து மதியிலாத் திதியிலே பாற்கேணி கங்கை கொள்ள கொண்டே முழுகி யெழ வினையகலுஞ் சொன்னோம் விதிவகை மாறுமென்ன பேச்சு.
- பாம்பாட்டிச் சித்தர்
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
- சுந்தரர்
கருத்துகள்