தேவாரம்
பாடப் பெற்ற ஸ்தலங்களில் 69 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல்
பெற்ற ஸ்தலங்களில் 15 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.
இறைவன்
- சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்.
இறைவி
- தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
கைகொட்டிப்
பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்வீக
ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம். இதன்பொருட்டே இக்கோயில் "திருத்தாளமுடையார்
கோயில் " என்றழைக்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர்.
சீர்காழியில் ‘தோடுடைய செவியன்’ என்ற பதிகம் பாடத் தொடங்கி, ஈசனின் இறையருள் கைவரப்
பெற்றார்., அங்கிருந்து அவர் சீர்காழிக்கு மேற்கில் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கோலக்கா
திருத்தலம் சென்றார். அங்குள்ள கொன்றை வனத்தில் எழுந்தருளி இருந்த ‘கொன்றைவன நாதரை’
வழிபட்டார். இந்த ஆலயத்தில் இருந்துதான் திருஞானசம்பந்தரின் சிவ தல யாத்திரை தொடங்கியது.
திருக்கோலக்கா
சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியின் முன்பாக நின்று, தனது சின்னஞ்சிறு கைகளை தட்டி
கைத் தாளம் போட்டுக் கொண்டே இறைவனைத் துதித்து பதிகம் பாடத் தொடங்கினார்.
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது
பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. தன் பிஞ்சு கரங்கள், சிவக்க
சிவக்க கைத்தாளம் இட்டு துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்தார் சிவபெருமான்.
‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ ஈசன் முடிவெடுத்தார். அதன்படி
‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன்
கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை.
உடனடியாக இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையான அபிதகுசாம்பாள், அந்த பொற்றாளத்திற்கு
ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்று முதல் இத்தல ஈசன்
‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார். அதே போல்
பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும், ‘தொனிபிரதாம்பாள்’
என்றும் பெயர் பெற்றார்.
சுந்தரர் இத்தலம்
பற்றி பாடிய திருமுறைப் பதிகத்தில், சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை
பதிவு செய்திருப்பதே இதற்குச் சான்றாகும்.
‘நாளும் இன்னிசையால்
தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே’
என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரர்.
இத்தலத்தில்
சிவபெருமானை நோக்கி தவம் செய்ததன் பயனாக, மகாவிஷ்ணுவை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்
என்று தல வரலாறு கூறுகிறது. திருமகள் திரு மணக்கோலம் கண்ட திருத்தலம் என்பதால் இது,
‘திருகோலக்கா’ என்று பெயர் பெற்றது. நவக்கிரகங்களின் தலைமை பதவியை சூரியனுக்கு, இந்த
தலத்தில் தான் ஈசன் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பு ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்குந் தன்மையாளனை யென் மனக்கருத்தை ஆளும் பூதங்கள் பாட நின்றாடும் அங்கணன்தனை எண்கணம் இறைஞ்சுங் கோளிலிப் பெருங்கோயிலுள்ளானைக் கோலக்காவினிற் கண்டு கொண்டேனே.
- சுந்தரர்
கருத்துகள்