38. திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)

தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 7 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 16 ஆவது ஸ்தலமும் இது ஆகும். 

இறைவன் - வைத்திய நாதர். 
இறைவி - தையல்நாயகி. 

இக்கோவில் தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்றே அழைக்கப்பட்டு வந்தது. புள்(ஜடாயு, சம்பாதி), இருக்கு (ரிக் வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகியோர் வழிபட்டதால், இத்திருத்தலத்தின் பெயர் இவ்வாறு அமைந்தது.

வைத்தீஸ்வரன் என்பதற்கு தமிழில் மருத்துவக்கடவுள் எனப்பெயர். நவகிரஹங்களுள் ஒன்றான அங்காரகன் தொழு நோயால் பாதிக்கப்பட்டு  அவரை வாட்ட, செவ்வாய் இங்கு உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு, நோயிலிருந்து விடுபட்டு தனது பழைய வடிவத்தை பெற்றார். 

இக்கோவிலில் வைத்தியநாத சுவாமி மற்றும் தையல் நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு கட்சி தருகின்றனர். தையல் நாயகி அம்பிகை, தன் திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், வில்வ மரத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடனிருக்க, 4448 வியாதிகளையும் தீர்த்தருளுகிறவர் வைத்தியநாத சுவாமி என்பது நம்பிக்கை.

இராவணன் சீதா தேவியை கவர்ந்து சென்றபொழுது, கழுகுகளின் அரசனான சடாயு அவனை தடுக்க, கோபம் கொண்ட இராவணன் சடாயுவை தனது வாளால் வெட்டி வீழ்த்தினான். மாண்டு போன சடாயு வின் சடலத்தை, ராம லக்ஷுமனர் இருவரும் இங்கு உள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீ மூட்டியதினால், இக்குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கின்றனர். 

இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்றருளுகின்றனர்.

தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும் 
ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம் 
மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப் 
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.
- திருஞானசம்பந்தர்
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்