தேவாரம்
பாடப் பெற்ற ஸ்தலங்களில் 68 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல்
பெற்ற ஸ்தலங்களில் 14 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.
இறைவன்
- பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்.
இறைவி
- பெரிய நாயகி, திருநிலைநாயகி.
திருஞானசம்பந்தர்
சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் திருக்குமாரராக இத்திருத்தலத்தில் தான் அவதரித்தார்.
ஒரு
நாள் சிவபாத இருதயர், மூன்றாண்டு நிரம்பாத திருஞானசம்பந்தரை இக்கோயிலில் உள்ள
பிரம்ம தீர்த்த கரையில் இருக்கச் செய்து நீராடிக்
கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர் பூர்வ
உணர்ச்சிமேலிட பார்வதி தேவியாரையும் பரமேசுவரரையும் நினைத்து "அம்மே...! அப்பா...!" என்று அழ, பெருமானும் அம்மையை நோக்கித்
திருமுலைப்பால் கொடுத்தருள்க என்றருளினார். அவ்வாறே
அம்மையாரும் பொற்கிண்ணத்தில் பாலைப்பெய்து ஞானத்தைக் குலைத்து ஊட்டியருளினார். அதையுண்ட சம்பந்தரும் ஞானசம்பந்தம் பெற்றுத் திருஞானசம்பந்தர்
ஆயினார். ஸ்நானம் முடித்து வந்த தந்தை
குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டதும், “பால் கொடுத்தது யார்?” என்று
வினவினார். திருஞானசம்பந்தரும் இடபாரூடர்
அம்மையப்பராய் எழுந்தருளி வந்ததைச்
சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்னும் திருப்பதிகம் பாடியருளினார்.
ஊழிக்காலத்தில்
சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாகக் கொண்டு பிரணவத் தோணியில் தேவியுடன் வந்து பிரளயத்தில்
அழியாது நின்ற இத்தலத்தில் தோணியப்பராகத் தங்கியதாக தலபுராணம் கூறுகிறது.
· பிரமன் தனது படைத்தல் தொழில் இடையூறின்றி முற்றுப் பெற இறைவனை வழிபட்டு
வந்ததால் - பிரமபுரம்.
·
இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் - வேணுபுரம்.
·
சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலமாதலின் - புகலி.
·
குருவான வியாழன் வழிபட்டு, குருத்துவம் பெற்றமையால் - வெங்குரு.
· பிரளய காலத்தில் இறைவன் உமையோடு சுத்தமாயையைத் தோணியாகக் கொண்டுவந்து
தங்கியிருந்ததால் தோணிபுரம்.
· பூமியைப் பிளந்து சென்ற இரணியாக்கனைக் கொன்றவராக மூர்த்தி வழிபட்டதால்
- பூந்தராய்.
·
தலைக்கூறாகிய ராகு பூசித்ததால் - சிரபுரம்.
·
புறா வடிவில் வந்த அக்கினியால் நற்கதியடைந்தமையால் - புறவம்.
· சண்பைப் புல்லால்மாய்ந்த தம்குலத்தோரால் வந்தபழி தன்னைப் பற்றாதிருக்க,
கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால் - சண்பை.
·
தில்லைப்பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டதால்
- ஸ்ரீகாளி (சீகாழி) .
· மச்சகந்தியைக்கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப் பராசரர் பூசித்ததால்
- கொச்சை வயம்.
· மலத்தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்டதால் - கழுமலம் எனவும் பெயர்
பெற்றது.
இக்கோயிலில்
குரு, லிங்கம் சங்கமம் என மூன்று மூர்த்தங்களாக விளங்குகிறார்.
லிங்கமூர்த்தம் : மூலவர் பிரம்மபுரீஸ்வரர்,
லிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தி. அம்பிகை திருநிலைநாயகி, பெரியநாயகி. இந்த அம்பிகையே
ஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அளித்தவர். சம்பந்தருக்குக் காட்சி கொடுத்த அம்மையப்பர்
இவர்களே
குருமூர்த்தம் : தோணியப்பர். அம்பிகை உமாமகேஸ்வரி. இவர் பிரம்மபுரீஸ்வரர்
வீற்றிருக்கும் இடத்தின் மேல்தளத்தில் காட்சி தருகின்றார். தோணியப்பர் கையில் மான்,
மழு இல்லை. இவர் அமர்ந்திருக்கும் சிறுகுன்று* போன்ற இடம் திருத்தோணி மலை என்று அழைக்கப்படுகிறது.
பெரியநாயகி சமேதராக இம்மலை மீது எழுந்தருளியிருக்கும் தோணியப்பரே குரு மூர்த்தம்.
சங்கமமூர்த்தம் : மூன்றாவது மூர்த்தி சட்டநாதர். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, அதன் தோலைச் சட்டையாகவும் , எலும்பை கதையாகவும் கொண்டதால், சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார். இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.
*ஆரியவர்த்தத்தை ஆண்டு வந்த
காலவித்து என்னும் வேந்தன் புத்திரப் பேறின்மையினால் வருந்தி உரோமச முனிவரைக் கண்டு தன் கவலையைத் தெரிவித்தான். முனிவரும் கயிலையின் சிகரத்தை தரிசித்தால் கவலை
நீங்கும் என்று கூறினார். எவ்வாறு தரிசிக்க முடியும் என்று கவலையுற்ற வேந்தனை நாட்டுக்கு
அனுப்பிவிட்டுக் கயிலாயம் சென்ற முனிவர் தவஞ்செய்தார். இறைவன் முனிவர் முன்தோன்றி வேண்டுவது யாதென, முனிவரும்
தென்னாட்டு மக்கள் தரிசிக்க வேண்டி இம்மலைச்சிகரம் ஒன்றைத் தென்திசையில் தோற்றுவித்து அதில் உமாதேவியுடன்
வீற்றிருந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதற்குக் கயிலாயபதி ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் போர் நடக்கும்
பொழுது இது நிறைவேறும் என்று அருள்புரிந்தார்.
பின்னொருநாள் ஆதிசேடனுக்கும், வாயுவுக்கும்
தம்முள் யார் வலியர் என்பது பற்றிப் போர் நிகழ்ந்தது. ஆதிசேடனும் தன் தலையால் கைலாய மலையை மூடிக்கொள்ள
வாயுவால் மலையை அசைக்கக் கூட முடியவில்லை. ஆதிசேடன் தனது ஒரு தலையை மெதுவாகத் தூக்கினான். உடனே மலைச்சிகரம் பெயர்ந்து ஒரு பெருங்கிளையும்
பல சிறு கிளைகளுமாக 11 கிளைகள் விழுந்தன. பெருங்கிளையான சிகரம் இறைவன் அருளால் 20 பறைவகளால்
இங்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டது. காலவித்து என்னும் அரசனும் தரிசித்தான். பின்னர் அம்மலை மறைந்து நிற்க, மலை வந்து தங்கிய
இடத்தில் சுதையால் 20 பறைவகள் தாங்கியது போலவே
கட்டுமலை ஒன்றைக்கட்டுவித்து அரசனும் தன் நகர் சேர்ந்தான்.
சங்கமமூர்த்தம் : மூன்றாவது மூர்த்தி சட்டநாதர். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, அதன் தோலைச் சட்டையாகவும் , எலும்பை கதையாகவும் கொண்டதால், சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார். இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.
திருஞானசம்பந்தர் புகழைக் கேள்விப்பட்டு திருநாவுக்கரசர் அவரை தரிசனம் செய்ய விரும்பி சீர்காழி சென்றடைந்தார். அப்பர் வருவதைக் கேள்விப்பட்ட சம்பந்தர் அவரை எதிர்கொண்டு
வரவேற்றார். நாவுக்கரசரை, "அப்பர்" என்று திருஞான சம்பந்தர் அழைத்ததும் இப்பதியில்
தான். பின் இருவரும் சேர்ந்து இணை பிரியாது பல சிவத்தலங்களுக்குச் சென்று பாடல்களை
இயற்றினர். அவற்றுள் ஒன்று சொற்சீர் மாலைமாற்றுத்திருப்பதிகம். மாலைமாற்று என்பது முதலிலிருந்து
இறுதிவரை படித்தால் அமையும் பாடலே இறுதியிலிருந்து முதல்வரை படிப்பது ஆகும்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா,
பரமாத்மா
யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய
என் ஆசைப் பொருளே
காணாகா-இப்படியெல்லாம்
கண்டு என்னைக் காப்பாற்று
காணாகா-இப்படியெல்லாம்
பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
காழீயா-சீர்காழியானே
மாமாயா நீ-அம்மை அம்மை
ஆம் நீ
மாமாயா-(இப்படி) பெரிய
மாயமானவனே
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
- திருஞானசம்பந்தர்
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியங் கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க் காளன்றி மற்றுமுண் டோ அந்த ணாழி அகலிடமே.
- திருநாவுக்கரசர்
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின் மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக் காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
- சுந்தரர்
கருத்துகள்