39. திருக்கடம்பூர் (மேலக்கடம்பூர் / கடம்பைக் கரக்கோயில்)

தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 88 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 34 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.  

இறைவன் - அமிர்தகடேஸ்வரர்.  
இறைவி - வித்யுஜோதி நாயகி, சோதி மின்னம்மை.

இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக்கோவில் எனப்படுகிறது.

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தகலசத்தை தேவர்கள் கிடைக்கப்பெற்றார்கள்.  அமிர்தம் கிடைக்கப்பெற்ற தேவர்கள் முழுமுதற்க் கடவுளான விநாயகரை வணங்காமல் அமிர்தத்தை அருந்திவிடுகிறார்கள்.  இந்திரனின் அலட்சியத்தைக் கண்டு விநாயகர் அமிர்த கலசத்தைத் எடுத்துச் சென்று விடுகிறார். அப்பொழுது அமிர்த கலசத்திலிருந்து ஒரு துளி அமிர்தம் கடம்ப வனமாகிய இத்தலத்தில் விழுந்து சுயம்பு லிங்கமாக மாறிவிடுகிறது.  அவரே இத்தலத்து அமிர்தகடேஸ்வரர்.








இந்திரனின் தாய் நாள்தோறும் அமிர்தகடேஸ்வரரை வணங்கி வர, வயதான தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இந்திரன் கர்பகிரஹத்தை ரதமாக்கி கவர்ந்து செல்ல முற்படுகிறான். இந்திரனின் செயலால் கோபமுற்ற விநாயகர் விஸ்வரூபம் எடுத்து இந்திரனின் ரதத்தை தனது கால் கடை விரலால் அழுத்துகிறார்.  தனது தவறை உணர்ந்த இந்திரன் என்ன பிராயச்சித்தம் வேண்டுமானாலும் செய்ய தயார் என ஆணவத்துடன் விநாயகரிடம் கூற, விநாயகரும் இந்திரனைக் கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்ய ஆணையிடுகிறார். ஆணவம் கொண்ட இந்திரனும், லிங்க பிரதிஷ்டை செய்ய ஒவ்வொரு லிங்கமும் சிதலமைந்து கொண்டே வருகிறது. அப்பொழுது இறைவன் அசரீரியாக இந்திரனிடம், கீழ் கடம்பூரில் ஓர் லிங்கம் ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிஷ்டை செய்ய சொல்ல, இந்திரனும் அவ்வாறே செய்து பாவ மன்னிப்பு பெறுகிறான்.

சூரபத்மனை வெல்ல புறப்பட்ட முருகப்பெருமானுக்கு அம்பிகை இத்தலத்தில் தான் வேல் தந்தருளியதாக வரலாறு.

 வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத் 
 தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக் 
 கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில் 
 தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே.
- திருஞானசம்பந்தர்

 தளருங் கோளர வத்தொடு தண்மதி
 வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
 கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
 களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்