40. ஓமாம்புலியூர்

தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 85ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 31 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.

இறைவன் - பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர்.
இறைவி - புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி.

புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது.



இவ்வூர் பிற புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு ஓமம் ஆம்புலியூர் = ஓமமாம்புலியூர் எனப்பட்டது. (சம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று வருகிறது. இக்கோயில் வடதளி என்றும் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது.)

உமாதேவி ஒரு முறை கைலாயத்தில் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது உமையின் கவனம் திசை திரும்பியது. சிவபெருமான் உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்து விட்டார். 

அதன்படி பூமிக்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள். அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார். அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொண்டார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்). இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது.
ஓமம் என்ற சொல் வேள்வியைக் குறிக்கும். வேள்விச்சிறப்புடைய ஊர் எனபதாலும் இத்தலம் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்து வந்தது என்றும், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.

இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள் பாலிப்பது இத்தலத்தில் மட்டும் தான். இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் நடராசரின் சிலாரூபம். இது வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று கூறப்படுகிறது.

பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.
- திருஞானசம்பந்தர்

ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
	அலைகடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும்
ஏராரும் மதிபொதியும்  சடையினானை
	எழுபிறப்பும் எனையாளா உடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டுவானை
	உயர்புகழ்சேர் தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீராரும் வடதளி எம் செல்வன் தன்னைச்
	சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே. 
- திருநாவுக்கரசர்

கருத்துகள்