42. திருஇடைச்சுரம் - (திருவடிசூலம்)

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 27 ஆவது ஸ்தலமும் இது ஆகும். திருஇடைச்சுரம் (தற்போது திருவடிசூலம் என்று வழங்குகிறது).




இறைவன் - ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்.
இறைவி - கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி. 

பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமா இருந்த இந்த இடத்துக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும்  ஒரு புதருக்குள் போய் தானாக பால் சொரிவதைப் பார்த்த இடையன் இவ்விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருப்பதைக்  கண்டறிந்தனர்.  அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்' ன்னும், அம்பாளை "கோவர்த்தனாம்பிகை' (கோ - பசு) என்று அழைக்கப்படுகிறார்.

திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின் போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரை பார்த்து இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரைப் பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர் அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன் சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்து விட்டான். திகைப்படைந்த சம்பந்தர் சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து தானே இடையன் வடிவில் வந்து அருள் புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை "காட்சிகுளம்" என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.

இத்தலத்து அம்பாள் தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள். திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால நீ இங்கயே இரு! என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள்.

     பவரிவள ரவிரொளி யரவரை தாழ     
 வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்    
    கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்     
          கனலெரி யாடுவர் காடரங் காக    
    விரிவளர் தருபொழில் இளமயில் ஆல     
          வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்    
    எரிவள ரினமணி புனமணி சாரல்     
          இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்