43. திருக்கழுக்குன்றம்

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 28 ஆவது ஸ்தலம் இது. அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

இறைவன் - வேதகிரீஸ்வரர், பக்தவசலேஸ்வரர் (தாழக்கோயில்).
இறைவி - சொக்கநாயகி , திரிபுரசுந்தரி (தாழக்கோயில்). 






ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.வேதமே கிரியாக (மலையாக) அமைந்த காரணத்தால், இத்தலப் பெருமான் வேதகிரீஸ்வரர் என்று வழங்கப்பெறுகிறார். பக்தவத்சலேஸ்வரர் என்னும் பெயரும் கொண்டிருக்கிறார். தாயாரின் திருப்பெயர் திரிபுரசுந்தரி என்பதாகும்.

மார்க்கண்டேயர் அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டுவிட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்ததாகவும், அங்கு அவர் பூஜை செய்யும் போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லாததால் அவர் பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்ததாகவும், அப்போது சங்குதீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியதாகவும், அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. 

மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது

இந்திரன் பூஜித்த இத்தலத்தில் இன்றும் அவன் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுவதாகவும், இவ்வாறு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வதாகவும் மறுநாள் கருவறை திறக்கும்போதும் தாங்கவொண்ணா வெப்பமாக இருக்கும் என்றும் கூறுவர்.

    தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ    
    ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்    
    நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்    
    காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.
- திருஞானசம்பந்தர்

 மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
 முதுபிணக்கா டுடையானை முதலா னானை
 ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
 ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
 பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
 புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
 காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
 கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
- திருநாவுக்கரசர்

 கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
 நின்ற பாவம்* வினைகள் தாம்பல நீங்கவே
 சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்
 கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
- சுந்தரர்

கருத்துகள்