அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற 16-ஆவது தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 249 வது தேவாரத்தலம் ஆகும்.
இறைவன் : பாசூர்நாதர், வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர்.
இறைவி : பசுபதிநாயகி, மோகனாம்பாள்.
மது, கைடபர்களை அழித்த தோஷத்தால் பீடிக்கப்பட்ட திருமால் சிவனை வேண்ட இத்தலத்தில் தன்னை பூசிக்குமாறு கூறினார். திருமாலும் இங்கு தீர்த்தத்தை உண்டாக்கி இலிங்கத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார்.
முன்னொரு காலத்தில் பசு மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வாசி என்னும் மரம் வெட்டும் கருவி கொண்டு மூங்கிலை வெட்டியபோது, புதரிலிருந்து குருதி வழியக்கண்டனர். வேடர்கள் வெட்டுவதை நிறுத்திவிட்டு, சோதித்துப் பார்த்தபொழுது அங்கு ஒரு சிவலிங்கம் இருக்கக் கண்டான். சிவலிங்கத்தின் மீது இன்றும் மரம் வெட்டும்போது ஏற்பட்ட தழும்புகள் அடையாளமாகத் திகழ்கின்றன. இக்கோயிலை அமைக்க கரிகாற் சோழ மன்னன் விரும்ப, அவன் மீது குறும்பன் எனும் குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாலன் மீது ஏவ, சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது. வாசி என்னும் கருவியால் வெட்டுப்பட்டதால் இறைவன் வாசீஸ்வரர் எனப்படுகிறார். பாசு என்பது மூங்கிலைக் குறிக்கும்
சமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம்.
சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார் மைந்தர் மணாள ரென்ன மகிழ்வா ரூர்போலும் ` பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே
- திருஞானசம்பந்தர்
வேடனாய் விசயன்றன் வியப்பைக் காண்பான் விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின் கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக் கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப் பூசல் ஆடினார் பெருங்கூத்துக் காளி காண அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு பாடினார் நால்வேதம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்