45. திருவாலங்காடு (பழையனூர்)

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற 15-ஆவது தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். 


இறைவன் : வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர்.
இறைவி : பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி.
தல மரம்: ஆலமரம்

வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. 

திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். 

காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் இறங்கி, அன்று இரவு துயிலும்போது, அவர் கனவில் வந்த ஆலங்காட்டப்பன் "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு" என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார்.

இரத்தபீஜன் எனும் அசுரனின் தொல்லை தாளாது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, முக்கண்ணனார் காளியைத் தோற்றுவித்து அவனுடன் போருக்கு அனுப்பினார். தன் உடலிலிருந்து பூமியில் விழும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு அசுரனாக மாறும் என்ற வரத்தை இரத்தபீஜன்  பெற்றிருந்தமையால், அவனது ரத்தம் பூமியில் விழாதவண்ணம் கபாலத்தில் ஏந்தி காளி அதைப் பருகி அவர்களை வீழ்த்தினாள். அசுரக்குருதியை அருந்தியமையால் காளியும்  அசுர குணம் பெற்று முனிவர்களை வதைக்க, எம்பெருமான் அவளுக்கு முன் தோன்றி தன்னுடன் நடனப் போட்டிக்கு வருமாறு அழைத்து  17  வகையான தாண்டவம் ஆடினார். காளியும் சற்றும் சளைக்காமல் எம்பெருமானுக்கு இணையாக ஆடினார். எனவே காளியை தந்திரத்தினால் வெல்ல முடிவு செய்து, தோடுடைய செவியன் தன் இடக்காது மணியைக் கீழே விழ வைத்து ஊர்த்துவ தாண்டவம் ஆடியவாறே காலால் அதை எடுத்து மீண்டும் அணிய, தன்னால் முடியாதென்று காளி தோல்வியை ஒப்புக் கொண்டாள். ‘என்னைக் காண வருவோர் முதலில் உன்னைக் கண்டே முழுப்பலன் அடைவர்’ என்று எம்பெருமான் அவளுக்கு வரமீய, அவளும் திருவாலங்காடு கோயிலுக்குப் பின்புறம் தனிக்கோயில் கொண்டாள்.

ஆலமரக்காடாக இருந்த இடத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியமையால் இத்தலம் திருவாலங்காடு என்று பெயர் பெற்றது; வடமொழியில் வடவாரண்யம் என்றானது.

புனிதவதி என்ற அம்மையார், காரைக்கால் எனும் ஊரில் பெருவணிகருக்கு தவப் புதல்வியாய் பிறந்தாள். நாகப்பட்டினத்து வணிக நீதிபதியின் மகனான பரமதத்தனுக்கும், புனிதவதிக்கும்  திருமணம் நடந்தது. திருமணம் முடுந்ததும் புதுமணத் தம்பதியினறை, தனதத்தனார் தனிக்குடித்தனம் அமர்த்தினார்.

பரமதத்தனின் இல்லம் தேடி உதவி வேண்டி வந்தவர் அவரிடம் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார். அக்கனிகளை அவர் தன் மனையாளிடம் ஒப்படைத்தார். அவ்வேளையில் பரம தத்தனின் இல்லம் தேடி சிவனடியார் ஒருவர் பசி மிகுதியால் அமுதுண்ண வந்தார். அவ்வேளையில் அமுது ஆகாததால் மாங்கனிகளுள் ஒன்றை அனுப்பி வைத்தார் அவ்வம்மையார். பின் கணவன் உணவருந்தும் வேளையில் இன்னொரு கனியை அமுதுடன் படைத்தார். கனி சுவை மிகுந்து காணப்பட்டதால், மீண்டும் சுவைக்க மற்றொரு கனியையும் கேட்டார். செய்வதறியாது திகைத்த அம்மையார் சிவனை வேண்டினார்.

இறைவனருளால் இன்னொரு கனியையும் பெற்றாள். கணவன் இக்கனி எப்படி வந்ததென வினவினான். சிவனருளால் கனி கிட்டியதாக அம்மையார் கூறினார். அம்மையார் பதிலில் திருப்தியடையாத பரமதத்தன், அப்படியென்றால் சிவனிடம் வேண்டி இன்னொரு கனி பெற்றித் தருமாறு கேட்க, சிவனருளால் மீண்டும் ஒரு கனி தோன்றி மறைந்தது. அம்மையாரின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து, அவரிடமிருந்து ஒதுங்கி வாழ தீர்மானித்தார். அதுமுதல் தன் இல்லற உறவுகளின் தொடர்புகளை அறுத்து வாழ்ந்தான். இதனிடையே வணிக நிமித்தம் வெளியூர் சென்ற வேளையில் பாண்டி நாட்டு ஒரூரில் மறுமணம் செய்தான். மறுமண வாழ்க்கையின் மூலம் ஒரு பெண் குழந்தையொன்றை ஈன்றெடுத்தனர். அக்குழந்தைக்கு புனிதவதியென்று பெயர் சூட்டி அதை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்.

இதனிடையே புனிதவதியாரின் பெற்றோர்கள், தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு தங்கள் மருமகனின் இருப்பிடம் சென்றடைந்தனர். பரமதத்தரோ தன் மனைவி மகளுடன் அம்மையாரின் காலில் வீழ்ந்து வணங்கினார்கள். தன்னிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்த கணவனின் செய்கை பிடிக்காத புனிதவதியார், தன் உடலை வருத்தி பேய் உருக் கொண்டு அம்மையார் தலையால் நடந்து திருக்கயிலாயம் சென்றடைந்தார்.

தலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார். பெருமான் புனிதவதியாரை ‘அம்மையே’ என்றழைக்க அம்மையார் சிவபெருமானை ‘அப்பா’ என்றழைத்தார். என்னவரம் வேண்டுமென்று வினவ, அம்மையார், பிறவாமை வரம் வேண்டுமென்றும் மீண்டும் பிறந்தால் ஐயனை மறவாதமனம் வேண்டுமென்றும், ஐயனின் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினார். 

‘அம்மையார் திருவாலங்காட்டில் சென்றமர்க' என்று இறைவன் அருளினார்.

அம்மையாரும் தலையால் நடந்து திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடுகின்றார்.


 துஞ்ச வருவாருந் தொழுவிப் பாரும் வழுவிப்போய்    
 நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரும் முனைநட்பாய்    
 வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்    
 டஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 
- திருஞானசம்பந்தர்
 வெள்ளநீர்ச் சடையர் போலும் 
 விரும்புவார்க் கெளியர் போலும்
 உள்ளுளே யுருகி நின்றங் 
 குகப்பவர்க் கன்பர் போலுங்
 கள்ளமே வினைக ளெல்லாங் 
 கரிசறுத் திடுவர் போலும்
 அள்ளலம் பழனை மேய 
 ஆலங்காட் டடிக ளாரே.
- திருநாவுக்கரசர்
 முத்தா முத்தி தரவல்ல
 முகிழ்மென் முலையா ளுமைபங்கா
 சித்தா சித்தித் திறங்காட்டுஞ்
 சிவனே தேவர் சிங்கமே
 பத்தா பத்தர் பலர்போற்றும்
 பரமா பழைய னூர்மேய
 அத்தா ஆலங் காடாவுன்
 அடியார்க் கடியேன் ஆவேனே.
- சுந்தரர்

கருத்துகள்