பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 13ஆவது பாடல் பெற்ற சிவத்தலம் மற்றும் 257ஆவது தேவார பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்..
இறைவன் : குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர்.
இறைவி: குழல்வாய் மொழியம்மை, சிவகாமியம்மை.
அகத்திய முனிவர் திருமால் உருவைக் குறுகச் செய்து சிவலிங்கமாக்கியதால் குற்றாலம் எனவும், பலாமரம் தலவிருக்ஷமாதல் பற்றிக் குறும்பலா எனவும் தலப்பெயர் ஏற்பட்டது. கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது.
கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, அங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோவிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும், உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.
கோவிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் விஷ்ணு சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு சிவனை பிரார்த்தனை செய்பவாறு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்த, விஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் லிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். விஷ்ணுவின் சிலாரூபம் லிங்கமாக மாறியதைப் போல ஸ்ரீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.
இத்தலத்தின் தலவிருட்சமாக பலாமரம் உள்ளது.குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றாலநாதர் கோவிலில் இருந்து சுமார் 1/2 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலாக அமைந்திருக்கிறது.
வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக் கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம் அம்பால் நெய்யோ டாட லமர்ந்தான் அலர்கொன்றை நம்பான் மேய நன்னகர்போலுந் நமரங்காள்.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்