இறைவன் : ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்.
இறைவி: திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம்
தொண்டை நாட்டில் உள்ள தேவாரம் பாடப் பெற்ற சிவ ஸ்தலங்களுள் 20 ஆவது ஸ்தலம் ஆகும். முன்பு ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. என்று பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு பெரிய சிவ லிங்கங்கள். ஒருவர் ஆதி புரீஸ்வரர். மற்றொருவர் வொற்றீஸ்வரர். 'வொற்றீஸ்வரர்' கோயில் முன் மண்டபத் தூண்கள் அற்புதமான சிற்பங்களையுடையது; மேலே உள்ள தூணில் - விதானத்தில் சூரியன் தலைப்புறமும், சந்திரன் காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக்காட்டப்பட்டுள்ள (கற்சிற்பம்) அழகு கண்டுணரத் தக்கது. மூலவர் ஆதி புரீஸ்வரர் சுயம்பு வடிவம் புற்று மண்ணினால்; நாக வடிவில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனி. சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன. உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம். சதுர வடிவமான கவசம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டள்ளது; ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுசட்டம், சவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை மட்டுமே சார்த்தப்படுகிறது. இந்நாள் முதலாக மூன்று நாள்களுக்கு மட்டுமே சுவாமி, கவசமில்லாதிருப்பார்; மீண்டும் சார்த்தப்பட்டு ஆண்டு முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிக்கின்றார். அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறுகிறது.
சுந்தரர், சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலி நாச்சியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.
பட்டினத்தாருக்குப் பேய்க் கரும்பு இனித்த இடம் இது ஆகும்; ஆதலின் தனக்குரிய இடம் இதுவே என்று முடிவு செய்து கடற்கரையொட்டிய இடத்தில் சமாதியானார் என்பது வரலாறு.
விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட் படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச் சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே.
- திருஞானசம்பந்தர்
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம் மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயாற் கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று உள்ளத்துள் ஒளியு மாகும் ஒற்றியூ ருடைய கோவே.
- திருநாவுக்கரசர்
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானாற் பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நான்அறி யேன்மறு மாற்றம் ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
- சுந்தரர்
கருத்துகள்