50. திருப்புத்தூர்

தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 250 ஆவது தலமாகும். பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 6 ஆவது ஸ்தலம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

இறைவன் : திருத்தளீஸ்வரர், திருத்தளிநாதர்.
இறைவி : சிவகாமி.







ஈசனின் கௌரி தாண்டவத்தை காண விரும்பிய மகாலட்சுமி,இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. வால்மீகி மகரிஷி இங்கு புற்று வடிவில் அமர்ந்து தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு ‘திருப்புத்தூர்’ என்று பெயர் வந்ததாகவும் ஆலய வரலாறு கூறுகின்றது.

 வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
திங்க ளோடு திளைக்குந் திருப்புத் தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்கள் உச்சிஉறையும் இறையாரே.
- திருஞானசம்பந்தர்

 புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்
 போர்விடையின் பாகன்காண் புவன மேழும்
விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்
 விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந்
தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோன்காண்
 தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்
 திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்