52. திருக்கானப்பேரூர் (காளையார்கோயில்)

தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 200 ஆவது தலமாகும். பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 10 ஆவது ஸ்தலம். சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

இறைவன் : காளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்.
இறைவி : சொர்ணவல்லி, சௌந்தர நாயகி, மீனாட்சி.

ஒருமுறை சுந்தரர், திருச்சுழி திருமேனி நாதரை தரிசித்துவிட்டு, காளையார் கோயிலுக்கு வந்தார். ஊர் எல்லையை அடைந்ததும் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதாக உணர்ந்தார்.  இறைவனின் மீது கால்களை தயங்கிய அவர், இறைவா! உன்னைக் காணமுடியவில்லையே என வருந்திப் பாடினார். இறைவன் காளைவடிவங்கொண்டு கையிற் பொற்செண்டும் திருமுடியில் சுழியுங்கொண்டு சுந்தரருக்குக் காட்சி தந்து "யாம் இருப்பது கானப்பேரூர்" என்று கூறி ஆற்றுப்படுத்தினார். காளை வழி காட்டிய தலம் என்பதால் இது காளையார் கோயில் ஆயிற்று.






இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவர் தந்த மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை சாப நிவர்த்திக்காக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தது. மனிதர்களின் பார்வை இந்த யானை மீது படக்கூடாது என்பது விதி. ஆனால், ஒரு முறை மனிதன் ஒருவன் இந்த யானையைப் பார்த்துவிட்டான். அதனால் அந்த யானை உடனே தன தலையால் பூமியை முட்டி பாதாளத்துக்குள் சென்று விட்டது. யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்த குளம் உண்டானது. இதற்கு "யானை மடு" என்று பெயர். ராமபிரான் ராவணனை அழித்த ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தலத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. 

தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ்
  சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்
புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள்
  பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்
கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங்
  கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
  கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
- சுந்தரர்
 பிடியெலாம் பின்செலப்
  பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி
  விதியினால் வழிபடுங்
கடியுலாம் பூம்பொழிற்
  கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண்
  உடையரோ அடியரே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்