55. திருமூக்கிச்சரம் (உறையூர்)


திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் சிவஸ்தலம் ஒரு மிகப் பழமையான 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது. தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் இதுவே மூக்கீச்சுரம் எனப்பட்டது.

இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர்
இறைவி : காந்திமதி அம்மை, குங்குமவல்லி






இங்கு சிவபெருமான் உதங்கமுனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து காலங்களில் காட்டியருளினார். காலையில் ரத்னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார். 

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு. உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவ்யானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம் உள்ளது.

புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய தலையையும் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான். 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனான்.

சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்