57. திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)

தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 124ஆவது தலமாகும். காவேரி தென் கரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 7 ஆவது ஸ்தலம்.

இறைவன் : பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கநாகர்

இறைவி : சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி (சுகந்த குழலேஸ்வரி), இரத்தினாம்பாள்.





தாரகாசுரன் என்ற அரக்கனின் காரணமாக தேவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். அவர்கள் நாரதரிடம் சென்று தாரகாசுரன் கொடுமைகளில் இருந்து மீள வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் திருசிராபள்ளி அருகே உள்ள இத்தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு அவரிடம் முறையிடும்படி ஆலோசனை கூறினார். தேவர்களும் அதன்படி இங்கு வந்து அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவம் எடுத்து இறைவனை வழிபட்டு வந்தனர். 

அச்சமயம் லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருக்க எறும்பு உருவில் இருந்த தேவர்கள் அதன் மீதேறி இறைவனை வழிபட மிகவும் சிரமப்பட்டனர். இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தன் லிங்க உருவை ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சாய்ந்தும், சொரசொரப்பான திருமேனியுடையவராகி  பூசையை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இத்தலம் எறும்பியூர் என்றும் இறைவன் எறும்பீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.



 பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்