தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 114ஆவது தலமாகும். காவேரி வட கரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 6 ஆவது ஸ்தலம்.
திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைபட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
இறைவன் : நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர்
பிரமன் திலோத்தமை மேல் காதல் கொண்ட பாவம் தீரும் பொருட்டு பூசித்த தலம்.. ஈசன், சித்தராக வந்து திருநீறு அளித்து, அதனைக் கூலியாக்கி, நான்காவது பிராகார மதிற்சுவர் கட்டியதால், அது, திருநீற்றான் மதில் எனப்படுகிறது. சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது கழன்று விழுந்த ஆரத்தை, இறைவன் திருமஞ்சன நீர் குடத்தின் மூலமாக ஏற்றார்.
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும்,மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.
மண்ணது வுண்டரி மலரோன்காணா வெண்ணாவல் விரும்பும யேந்திரருங் கண்ணது வோங்கிய கயிலையாரும் அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
- திருஞானசம்பந்தர்
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
- திருநாவுக்கரசர்
மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந் துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாய அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும் இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
- சுந்தரர்
கருத்துகள்