59. திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி)

தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 118ஆவது தலமாகும். காவேரி தென் கரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 1 ஆவது ஸ்தலம்.  

இறைவன் : ரத்னகீரீசர், அரதனாசலேஸ்வரர், மாணிக்கஈசர், முடித்தழும்பர்

இறைவி : சுரும்பார்குழலி



இத்தலத்தில் மலைமேல் உள்ள கோவிலை அடைய சுமார் 1018 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்

சுமார் 75 படிகள் ஏறியவுடன் "பொன்னிடும் பாறை" என்ற சந்நிதி உள்ளது.இறைவன் பொன் வேண்டி வந்த சுந்தரருக்கு இவ்விடத்தில் பொன் அளித்ததால் "பொன்னிடும் பாறை" என்ற பெயர் பெற்றது.

இரத்தினம் வேண்டிவந்த வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்து நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பி அதில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று சொன்னார். வேந்தன் எவ்வளவு முயன்றும் நீர்த்தொட்டியை காவிரி நீரால் நிரப்ப முடியவில்லை. கோபமுற்ற அரசன் அந்தணர் மீது கோபம் கொண்டு தன் வாளை ஓங்கி அந்தணரை வெட்ட முயன்றான். அந்தக் கணமே இறைவன் அவ்வாளைப் போக்கி மன்னன் முன் காட்சி கொடுத்து இரத்தினம் தந்த காரணத்தால் இத்தலம் வாட்போக்கி என்னும் பெயர் பெற்றதென்பர். மன்னனுக்கு இரத்தினம் கோடுத்து உதவியதால் இறைவன் இரத்தினகிரிநாதர் என்றும், மன்னன் வாளைப் போக்கியதால் வாட்போக்கி நாதர் என்றும் வழங்கப்படுகிறார். இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டுப்பட்ட வடுவைக் காணலாம்

இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் இறைவன் ஆணையில் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச்செய்தி. “காகம் அணுகாமலை” என்பர். இதை உறுதிப் படுத்துவது போல் இந்த மலையின் உச்சியில் காகம் பறப்பதில்லை.


 காலபாசம் பிடித்து எழு தூதுவர் 
பாலகர் விருத்தர் பழையார் எனார் 
ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார் 
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்