தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 117ஆவது தலமாகும். காவேரி வட கரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 63 ஆவது ஸ்தலம்.
இறைவன் : மரகதாசலேசுவரர், மரகத நாதர்
முனிவர்களால் வணங்கப்பெறும் அகத்தியர் தன் சிஷ்யர்களாகிய பிற முனிவர்களோடு ஒரு சமயம் தீர்த்த யாத்திரையாக திருக் கேதாரம் முதல் திருவிராமேசுவரம் வரை சென்று கொண்டிருக்கும்போது வழியில் கடம்பவனத்தை அடைந்து காவிரியிலிருந்து பன்னிரண்டு குடம் நீர் எடுத்து வந்து கடம்பவன நாதருக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார். பின்னர், அருகிலுள்ள இரத்தினகிரிக்குச் சென்று, சூரிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, காவிரியிலிருந்து புனிதநீரை மூன்று குடங்களில் எடுத்துவந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரமும் அர்ச்சனையும் செய்து வேதகீதங்களால் துதித்து, ஆலயத்தை மும்முறை வலம் வந்து, மீண்டும் கடம்பவனத்தை அடைந்தார். மாலைக் காலம் வருவதறிந்த அகத்தியர், காவிரியைக் கடந்து, மரகதாசலத்தை அடைந்தார். அவ்வேளையில், கோயில் அர்ச்சகர்கள் பூஜையை முடித்துக் கொண்டு, ஆலயக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சென்று விட்டனர். இதனை அறிந்த அகத்தியர், இறைவனைத் தரிசிக்க முடியாமல் போனது பற்றி மிக்க வருத்தமடைந்தார். அப்போது ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது: " மாபாதகங்களையும் தீர்த்து அருள் புரியும் இம்மலையை அடைந்தபிறகும் ஏன் துயரம் அடைகிறாய் ? பசுக்கள்,பக்ஷிகள், மிருகங்கள் ஆகியவை எந்தக் காலத்தில் இங்கு வந்தாலும் குற்றமில்லை. அவற்றிலும், காற்று, ஈ, பசு, அக்கினி, நெய், நெல், யோகி, அந்தணர் ஆகியோர் எக்காலத்திலும் அசுத்தமாவதில்லை. ஆகவே நீ இப்போது ஈ உருவில் உள்ளே சென்று இறைவனை வழிபடுவாயாக. இறைவனருளால் அவரது திருமேனியில் தங்கிய தக்ஷகன் என்னும் நாகராஜன் இம்மலையின் மேற்புறம் சர்ப்ப நதி வடிவில் இருக்கிறான். அங்கு ஸ்நானம் செய்பவர்கள் தாம் விரும்பிய வடிவைப் பெறுவார்கள். ஆகவே நீ அத்தீர்த்தத்தை நாடிச் சென்றால் உன் கருத்து நிறைவேறும் " என்று கூறியவுடன் , மகிழ்வுற்ற அகத்தியர், இறைவனைத் துதித்தார். பெருமானது கருணையினால், அவரது கண்டத்தில் இருந்த தக்ஷகன் , நதி ரூபமாக ஆகிக் காவிரியோடு கலந்தது. அச்சங்கமத்தில் ஸ்நானம் செய்து ஈ வடிவம் பெறுமாறு அகத்தியருக்கு அசரீரி வாக்கு . அருளியபடியே சர்ப்ப நதியும் காவிரியும் கூடுமிடத்தில் அகத்தியர் ஸ்நானம் செய்தவுடன் ஈயுருவம் பெற்றார். இவ்வடிவுடன் ஆலயத்தினுள் சென்று, பெருமானைக் கண்ணாரத் தரிசித்தார். மனத்தினால் அனைத்து பூஜைகளையும் செய்தார். பிறகு வெளியில் வந்து சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்தவுடன் முந்திய முனிவடிவம் பெற்றுத் தனது இருப்பிடம் சென்றடைந்தார். அது முதல் இம்மலை ஈங்கோய் மலை எனப் பெயர் பெற்றது.
ஒரு காலத்தில், பிருங்கி ரிஷியானவர் அம்பிகையைத் துதியாமல் சிவனை மட்டுமே துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை, மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத்தவம் செய்து வந்தாள். கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி, அவள் வேண்டியபடியே தனது நீங்காத பாகமாக ஏற்றதால் அர்தநாரீசுவரன் என்று அழைக்கப் பட்டான். இருப்பினும் அவ்வடிவிலுள்ள சிவபாகத்தை மட்டும் பிருங்கி முனிவர் வலம் வரவே, தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. நிற்கும் சக்தியை இழந்த அவருக்கு இரங்கிய பெருமான் தண்டம் போன்ற கால் தந்து நிற்கும்படிச் செய்ததாக வரலாறு.
தனக்கு ஏற்படும் இரஜோகுணம் நீங்க வேண்டி, கிருத யுகத்தில் பிரமதேவன் இத் தலத்தை அடைந்து பிரம தீர்த்தம் ஏற்படுத்தி அதில், பிரம ஞானம் எனத் தொடங்கும் மந்திரத்தை ஜபித்தவனாக அதில் ஸ்நானம் செய்து, திருப் புளிய மர நீழலில் ஜபம் செய்தும், தானங்கள் செய்தும் இறைவனைப் பல காலம் பூஜித்து வந்தான்
வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித் தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக் கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையா.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்