தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 119ஆவது தலமாகும். காவேரி தென் கரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 2 ஆவது ஸ்தலம்.
இறைவன் : தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்.
இறைவி : ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பா
இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான் பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனத்திற்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார். முனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக அணிந்து கொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக்கி கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்து கொண்டு மமதை அடங்கி இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார். கருவறை அர்த்த மண்டபத்தில் பிச்சாடனர் வேடம் பூண்டு வந்த சிவபெருமானின் உற்சவத் திருமேனி உள்ளது. பிரகாரத்திலும் பிச்சாடனர் உருவச்சிலை இருக்கிறது.
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை கூறுசேர்வதொர் கோலமாய்ப் பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை ஆறுசேர்சடை அண்ணலே.
- திருஞானசம்பந்தர்
செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந் திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங் கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங் குடமூக்குங் கோகரணங் கோலக்காவும் பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங் கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங் கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.
- திருநாவுக்கரசர்
பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் புதுமலர்க்கழலிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருட்பெருங் கடலே அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச் செய்யமே னியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
- மாணிக்கவாசகர்
கருத்துகள்