திருவெண்ணைநல்லூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள 46 ஆவது பாடல் பெற்ற சிவ தலம் ஆகும். இந்த ஊர் திருஅருட்துறை எனவும் வழங்கப்படும்.
இறைவன்:கிருபாபுரீசுவரர், அருட்துறை நாதர், தடுத்தாட்கொண்டநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, வேற்கண்ணிநாயகி.
அம்பிகை மஹிஷாசுரனை வதம் செய்வதற்காக கோர உருவம் எடுத்து அழித்தாள். கோர உருவம் நீங்குவதற்கு வெண்ணெய்யால் கோட்டை அமைத்து சிவனை நோக்கி வழிபட்டதால் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றது.
திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத்தொண்டனாக hiruபணிபுரிந்த சுந்தரர் தினமும் நந்தவனம் சென்று மலர்களைக் கொய்து இறைவனை பூஜித்து வந்தார். ஒருநாள் நந்தவனம் சென்றபொழுது பார்வதி தேவியின் பணிப்பெண்களான அநிநிதை, கமலினி இருவரின் அழகில் மயங்கினார். இதை அறிந்த சிவபெருமான் 'நீ பூவுலகில் பிறந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டு பின் கயிலை திரும்புவாய்!' எனக் கூறினார். அதைக் கேட்டு மனம் கலங்கிய சுந்தரர், 'எம்பெருமானே! தங்களுக்கு தொண்டு புரிவதிலிருந்து நீங்கி மானுடனாகப் பிறந்து மயங்கும் போது என்னை ஆட்கொள்ள வேண்டும்' என வேண்டினார். இறைவனும் 'அவ்வாறே ஆகுக!' என்றார்.
அதன்படி திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில் சடையனார் - இசைஞானியார் என்னும் ஆதி சைவ அந்தணர் வீட்டில் சுந்தரர் பிறந்தார். குழந்தைக்கு அவரது பெற்றோர்கள் நம்பியாரூரார் எனப் பெயரிட்டனர். சுந்தரருக்கு ஐந்து வயதாகும் போது வீதியில் சிறிய தேரை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்த அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையர் சுந்தரரின் அழகில் மயங்கி அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். சுந்தரருக்கு திருமணப்பருவம் வந்தது. அவருக்கு பண்ருட்டி அருகில் உள்ள மணம் தவிழ்ந்த புத்தூர் என்ற ஊரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளான கமலஞானப் பூங்கோதைக்கும் மண நாள் குறித்தனர். திருமண நாளன்று மாங்கல்ய தானம் நடைபெறும் வேளையில், ஒரு அந்தணக் கிழவர் வந்து சுந்தரரை நோக்கி,' எனக்கும் உனக்கும் ஒரு வழக்கு உள்ளது. அது முடிந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும்' என்றார். இதைக்கேட்ட சபையோர் திகைத்தனர். அப்பொழுது முதியவர், 'இந்த நாவலூரான் எனக்கு அடிமை', எனக் கூறினார். மேலும் அவர் 'அந்த காலத்தில் இவரது அப்பனுக்கு அப்பனான இவன் பாட்டன் எனக்கு ஆள் அடிமை ஓலை எழுதி கொடுத்துள்ளான்' எனக்கூறினர். அதற்கு சுந்தரர் "ஓர் அந்தணர் மற்றோரு அந்தணருக்கு அடிமையாவது உண்டோ? நீர் என்ன பித்தனோ?" எனக் கோபமாக கேட்டார். 'பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக என்னை நீ எத்தனை தீங்கு சொன்னாலும் நான் கலங்க போவதில்லை. நீ எனக்கு பணி செய்ய வேண்டும்' என்றார். சுந்தரர் அதற்கு ஆளடிமை ஓலை ஒன்று உள்ளது என்று கூறினீர்! அதைக் காட்டும்! எனக்கோரினார்.
அதைக் கேட்டதும் கிழவேதியர் ஏளனமாக, 'நீ அந்த ஓலையை காணத் தகுதியுள்ளவனா? நீ எனக்கு அடிமைப் பணி புரியத்தான் நீ தகுதியுள்ளவன்" எனக் கூறினார். இதைக்கேட்ட நம்பியாரூரார் வெகுண்டு முதியவர் கையில் இருந்த ஓலையை பிடுங்கி கிழித்து எறிந்தார். இதை கண்ட கிழவேதியர் நம்பியாரூரை வன்தொண்டர், வம்புக்காரன் என திட்டியபடியே 'நீ கிழித்தது படி ஓலை தான், மூல ஓலை என்னிடம் பத்திரமாக உள்ளது.' எனக் கூறினார். இதைக் கேட்ட சபையோர்கள் மூல ஓலையை காட்டவும் உரைத்தனர். அதற்கு அந்த வேதியர் 'திருவெண்ணெய் நல்லூரில் உள்ள வழக்காடு மன்றத்தில் நான் மூல ஓலையை நான் காண்பிப்பேன்' எனக்கூறவும் அனைவரும் திருவெண்ணைநல்லூர் நோக்கிச் சென்றனர். அங்கு உள்ள நீதி அரசர்கள் விசாரித்தபோது சுந்தரரின் பாட்டன் ஆரூரன் எழுதிக் கொடுத்த மூல ஓலையைக் காட்டினார். அதில்
"அருமறை நாவல் ஆதிசைவன் ஆரூரன் செய்கை
பெருமுனி வெண்ணைநல்லூர்ப் பித்தனுக்கு யானும்
என்பால் வருமுறை மரபினரும் வழத்தொண்டு
செய்ய இவ்வோலை இருமையாய் எழுதினேன்"
எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சபையோர்கள் இதற்கும் என்ன ஆதாரம் எனக்கேட்டபொழுது திருநாவலூரில் உள்ள இவரது பாட்டன் எழுதிவைத்த பல்வேறு ஓலைகளை ஒப்பிட்டு பார்த்து தீர்ப்பு வழங்குமாறும் கூறினார். நீதி அரசர்கள் அது போலவே ஒப்பிட்டுப் பார்த்து முதியவருக்கு சுந்தரன் அடிமை எனது தீர்ப்பளித்தனர். சுந்தரரும் தம் சம்மதத்தைத் தெரிவித்து 'நீர் முன்பு காட்டிய ஓலையில் தலைமுறை தலைமுறையாக திருவெண்ணெய் நல்லூரில் வாழ்வதாக குறிப்பிட்டீர்! அப்படியானால் நீர் வாழும் வீட்டைக் காட்டும்!' எனக்கூறினார். அப்பொழுது முதியவர் கோயிலுக்கு வெளியில் தான் அணிந்த பாதுகையை அவிழ்த்துவிட்டு கோவிலுக்குள் சென்று மறைந்தார். அங்கு சிவபெருமான் உமா தேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தார். கைலையில் மாதர் மேல் மனம் வைத்ததால் மண்ணில் மானிடராக பிறக்கவைத்ததையும், அவர் வேண்டியபடி தக்க தருணத்தில் தடுத்தாட்கொண்டதையும் கூறினார். பின் சுந்தரரைப் பார்த்து சொற்றமிழால் என்னைப் பாடுக எனக் கூறினார். சுந்தரர் அதற்க்கு நான் எப்படிப் பாடுவேன் எனக் கூற, எம்மை 'பித்தா!' எனக் கூறினாயே அதையே முதலடியாக வைத்து பாடக் கூறினார்.
பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந் திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன் இடைமரு தின்னம்பர் ஏகம்பமும் கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங் கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே.
கருத்துகள்